வழக்கை வாபஸ் பெறுவதாக உறுதி!: பிரசாத் ஸ்டூடியோவுக்குள் செல்ல இளையராஜாவுக்கு அனுமதி அளித்தது சென்னை உயர்நீதிமன்றம்..!!

சென்னை: வழக்கை திரும்ப பெறுவதாக அளித்த உறுதியை ஏற்று பிரசாத் ஸ்டூடியோவுக்குள் செல்ல இளையராஜாவுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியிருக்கிறது. பிரசாத் ஸ்டூடியோவின் நிபந்தனையை இளையராஜா ஏற்றதால் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி தந்துள்ளது. பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து தன்னை வெளியேற்றியதை எதிர்த்தும், தியானம் செய்வதற்கு ஒருநாள் அனுமதிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டு, இளையராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கின் மீதான விசாரணை நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பாக கடந்த 4 நாட்களாக நடைபெற்று வருகிறது. அச்சமயம் இருதரப்புக்கும் இடையே சுமூக தீர்வு கண்டு பிரச்சனைக்கு தீர்வு காணும்படி நீதிபதி அறிவுறுத்தினார். அதன்படி பிரசாத் ஸ்டூடியோ தரப்பில் சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டு நேற்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

அதில் தங்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளையும், இழப்பீடு கோரும் வழக்குகளையும், சிவில் நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளையும் திரும்பப்பெற்றால் ஓர் உதவியாளர், ஓர் இசைக்கலைஞர், வழக்கறிஞர் ஆகியோருடன் மட்டுமே இளையராஜாவை ஸ்டூடியோவுக்குள் அனுமதிக்க தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட இளையராஜா தரப்பு வழக்கை வாபஸ் பெறுவதாக அறிவித்தது. மேலும் ஸ்டூடியோவில் உள்ள தமது பொருட்களை மட்டும் எடுத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும், ஸ்டூடியோ இடத்தில் உரிமை கோர மாட்டேன் என்றும் இளையராஜா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  இந்நிலையில், இதுகுறித்து உத்தரவு பிறப்பித்த நீதிபதி, பிரசாத் ஸ்டூடியோவுக்கு செல்ல இளையராஜாவுக்கு ஒருநாள் அனுமதி வழங்கினார்.

பிரசாத் ஸ்டூடியோவுக்கு சென்று இசைக்கருவிகளை எடுக்கும் தேதியை இருதரப்பும் பேசி முடிவு செய்யலாம் எனவும், நேரத்தை பொருத்தவரை காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 4 மணிக்குள் முடிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். அதேநேரத்தில், அவர் தியானம் மேற்கொள்வது குறித்தும் முடிவெடுத்துக் கொள்ளலாம் எனவும் நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். இளையராஜா பிரசாத் ஸ்டூடியோ செல்லும்போது போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் நீதிபதி சதீஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories:

>