×

நியூசிலாந்துடன் 3வது டி20 பாகிஸ்தான் ஆறுதல் வெற்றி

நேப்பியர்: நியூசிலாந்துக்கு எதிரான 3வது மற்றும் கடைசி டி20 போட்டியில், பாகிஸ்தான் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது.  நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி  3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. டி20 தொடரின் முதல் 2 போட்டிகளையும் 5 மற்றும் 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற நியூசிலாந்து  தொடரையும் கைப்பற்றியது. அந்த அணி 2-0 என முன்னிலை வகிக்க, கடைசி டி20 போட்டி நேப்பியர், மெக்லீன் பார்க் மைதானத்தில் நேற்று நடந்தது.  டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்துவீச, நியூசிலாந்து 20 ஒவரில் 7 விக்கெட் இழப்புக்கு 173 ரன் குவித்தது. அந்த அணியின் கான்வே அதிகபட்சமாக 63 ரன் (45 பந்து, 7 பவுண்டரி, 1 சிக்சர்), டிம் செய்பெர்ட் 35 ரன் (20 பந்து, 2 பவுண்டரி, 3  சிக்சர்), கிளென் பிலிப்ஸ் 31 ரன் (20 பந்து, 4பவுண்டரி) விளாசினர். பாக். தரப்பில் பாகீம் அஷ்ரப் 3, ஷாகீன் அப்ரிடி, ஹரிஸ் ராவுப் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் 19.4 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 177 ரன்  எடுத்து ஆறுதல் வெற்றியை வசப்படுத்தியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் முகமது ரிஸ்வான் கடைசி ஓவர் வரை களத்தில் இருந்து 89ரன் (59 பந்து, 10 பவுண்டரி, 3 சிக்சர்) குவித்தார். முகமது ஹபீஸ் 41ரன் (29 பந்து, 2 பவுண்டரி,  3 சிக்சர்) எடுத்தார். நியூசி. தரப்பில் டிம் சவுத்தீ, ஸ்காட் குகெலிஜின் தலா 2,  ஜேம்ஸ் நீஷம் ஒரு விக்கெட் எடுத்தனர்.   ஆட்ட நாயகனாக பாக். வீரர் முகமது ரிஸ்வான், தொடர் நாயகனாக  நியூசி. வீரர் டிம் செய்பெர்ட் தேர்வாகினர். மொத்தம் 3 ஆட்டங்களை தொண்ட தொடரை நியூசி  2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. சமீபத்தில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான  டி20 தொடரையும் நியூசி கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. இரு அணிகளும் அடுத்து டெஸ்ட் போட்டித் தொடரில் விளையாட உள்ளன. முதல் டெஸ்ட் டிச. 26ம் தேதி  மவுன்ட் மவுங்கானுயி மைதானத்தில் தொடங்குகிறது.



Tags : Pakistan ,New Zealand , 3rd T20 Pakistan consolation win with New Zealand
× RELATED பயங்கரவாதம் சப்ளை செய்த பாகிஸ்தான்...