×

திருப்போரூர் அருகே பயங்கரம்: பிரபல ரவுடியாக வலம் வந்த அமமுக பிரமுகர் சரமாரி வெட்டி கொலை: போலீஸ்காரரின் கல்லறையில் உடலை எரித்துவிட்டு மர்மநபர்கள் தப்பியோட்டம்

திருப்போரூர்: திருப்போரூர் அருகே, பிரபல ரவுடியாக வலம் வந்த அமமுக பிரமுகர் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார். அவரது, உடலை போலீஸ்காரரின் கல்லறையில் எரித்துவிட்டு மர்மநபர்கள் தப்பிவிட்டனர். இச்சம்பவம்  அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருப்போரூர் அடுத்த மேலையூர் கிராமம், பழண்டியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சந்திரன். ஓய்வு பெற்ற தலைமைக் காவலர். இவரது மகன் சதீஷ்குமார் (39). பிரபல ரவுடி. இவர் மீது கொலை, கொலை முயற்சி, கொள்ளை, திருட்டு,  சாராய விற்பனை, ஆள்கடத்தல், கட்டப்பஞ்சாயத்து உள்பட 26 வழக்குகள் 10க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன. சதீஷுக்கு திருமணமாகி 12 வயதில் மகன் உள்ளான். லட்சுமி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளான்.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன், பாண்டூர் கிராமத்தை சேர்ந்த மளிகைக்கடைக்காரரின் மனைவி லட்சுமி என்பவருடன், சதீஷுக்கு தொடர்பு ஏற்பட்டது. இதையடுத்து, லட்சுமியுடன் சேர்ந்து மளிகைக்கடைக்காரரை கொன்று சடலத்தை மூட்டைக்  கட்டி கோவளம் முகத்துவாரத்தில் வீசினார்.  திருப்போரூர் அருகே முள்ளிப்பாக்கம் கிராமத்தில் அடகு கடைக்காரர் ரத்தன்லால் என்பவரை பணம் கேட்டு கடத்தி சென்று உளுந்தூர்பேட்டை அருகே எரித்துக் கொன்றார். இந்த கொலைகளை அவர்  கொடூரமாக கொன்றபின்னர், அவர் ரவுடியாக பிரபலமானார்.கடந்த ஜனவரி 27ம் தேதி சதீஷ், திருந்தி வாழ விரும்புவதாக கூறி செங்கல்பட்டு ஆர்டிஓவிடம் மனு அளித்தார். அதன் பின்னர், குற்ற சம்பவங்களிலும் ஈடுபடாமல் இருந்துள்ளார். இதற்கிடையில், கடந்த சில மாதங்களுக்கு முன் சதீஷ்,  அமமுகவில் வர்த்தகப் பிரிவில் ஒரு பதவியை பெற்றார். மேலும், மேலையூர் ஊராட்சி மன்ற தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடப் போவதாக கூறினார்.

அந்தவேளையில், சில மாதங்களுக்கு முன் பல்லாவரத்தில் உள்ள ஒரு சொத்தை விற்றதில் இவரது பாகமாக 1 கோடி கிடைத்ததாக கூறப்படுகிறது. இந்த பணத்தில், மேலையூர் பகுதியைச் சேர்ந்த சிலருக்கு பல லட்சம் கடன் கொடுத்து வட்டி  வசூலித்துள்ளார். பழண்டியம்மன் கோயிலை சீரமைத்து குடமுழுக்கு நடத்த ஒரு பெரும் தொகையை செலவு செய்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு மேலையூர் கிராமத்தின் சாலையோரத்தில் ஒரு கார் கவிழ்ந்து கிடப்பதாக திருப்போரூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் நள்ளிரவு 12.30 மணிக்கு போலீசார் அங்கு சென்று பார்த்தபோது, கவிழ்ந்த  நிலையில் ஒரு கார் கிடந்தது. அதை புகைப்படம் எடுத்துக் கொண்டு, கீழே கிடந்த நம்பர் பிளேட்டையும் கையோடு எடுத்து சென்றனர். இந்நிலையில், நேற்று காலை 6 மணியளவில் மேலையூர் மயானம் அருகே காலைக்கடன் கழிக்கச் சென்ற  சிலர், எரிந்த நிலையில் சடலம் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுபற்றி அப்பகுதி முழுவதும் பரவியதும், பொதுமக்கள் அங்கு திரண்டனர்.

தகவலறிந்து திருப்போரூர் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி, எஸ்ஐ ராஜா மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரித்தனர். அதில் சடலமாக கிடந்தவர் சதீஷ் என தெரிந்தது. தொடர்ந்து எஸ்பி கண்ணன், மாமல்லபுரம் ஏஎஸ்பி சுந்தரவதனம்  ஆகியோர் அங்கு சென்று பார்வையிட்டனர். கொலை நடந்த இடத்தின் அருகே கார் கவிழ்ந்து கிடந்ததை பார்த்த போலீசார், மர்மநபர்கள் சதீஷை கொலை செய்ய துரத்தி வந்ததும், கார் கவிழ்ந்ததால், அவரை வெட்டி கொலை செய்து இழுத்துச் சென்று, சதீஷ்குமாரின் தந்தை சந்திரனின்  கல்லறை மீதே அவரது உடலை போட்டு தீ வைத்து எரித்ததும் முதற்கட்ட விசாரணையில் தெரிந்தது. இரவு போலீசார் எடுத்து சென்ற நம்பர் பிளேட், சதீஷ் சென்ற காரில் இருந்து விழுந்தது என தெரிந்தது. இதையடுத்து சடலத்தை கைப்பற்றி  செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சதீஷை கொலை செய்தது யார், எதற்காக கொலை நடந்தது என தீவிரமாக விசாரிக்கின்றனர். இதற்கிடையில், சந்தேகத்தின் பேரில் 10 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

தந்தையின் சமாதி மேல் சம்பவம்
கொலை செய்யப்பட்ட சதீஷ்குமாரின் தந்தை சந்திரன் தலைமைக் காவலராக இருந்தார். தொடர்ச்சியாக சதீஷ் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டதால், அவருக்கு சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து உயர் போலீஸ் அதிகாரிகள் சந்திரனை அழைத்து  எச்சரித்தனர். அப்போது சதீஷ் தனது மகனே இல்லை. அவனை போலீசார் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என எழுதி கொடுத்தார். இதையடுத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சந்திரனும் இறந்து விட்டார். அவர் இறந்த பிறகு அவரது  சமாதிக்கு சென்று சதீஷ்குமார் பல்வேறு கொலை, கொள்ளை முடிவுகளை அங்குதான் எடுப்பதாக கூறப்படுகிறது. கடைசியில் அவனது முடிவும் தந்தையின் சமாதிக்கு அருகிலேயே நடந்து விட்டது குறிப்பிடத்தக்கது.


Tags : Thiruporur ,death ,policeman , Terror near Thiruporur: Amamuga Pramukar, who came to power as a famous rowdy, was hacked to death by a volley
× RELATED செங்கை கலெக்டர் துவக்கி வைத்தார்;...