×

ஆன்லைன் கடன் தொல்லையால் கிணற்றில் குதித்து வாலிபர் தற்கொலை: குன்றத்தூரில் மின்சாரம் பாய்ந்து 2 பேர் பலி

மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த படாளம் அருகே பழையனூர் சாலை கிராமத்தை சேர்ந்தவர் விவேக் (27). படாளம் அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த ஒரு மாதத்துக்கு முன் விவேக், தனது தந்தையின்  மருத்துவ செலவுக்காக, ஆன்லைன் பைனான்ஸ் நிறுவனத்தில் 4 ஆயிரம் கடன் பெற்றுள்ளார். ஆனால், குறிப்பிட்ட தேதியில் கடனை வட்டியுடன் செலுத்த முடியவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து, ஆன்லைன் பைனான்ஸ் நிறுவனத்தினர், விவேக் பற்றி, உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அவதூறு தகவலை அனுப்பியுள்ளனர். இதனால் உறவினர்கள், விவேக்கிடம் விசாரித்தனர். கடன் கொடுத்தவர்களும் இன்னும் நீஎல்லாம் உயிரோடு இருக்கிறீயா? என கேவளமாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த விவேக், நேற்று முன்தினம் இரவு பழையனூர் சாலை கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். நேற்று காலை, அப்பகுதிக்கு சென்ற பொதுமக்கள், விவேக் சடலமாக மிதப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து செங்கல்பட்டு தீயணைப்பு நிலைய வீரர்கள், சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை மீட்டனர். இதையடுத்து படாளம் போலீசார், சடலத்தை கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

 இதற்கிைடயில், விவேக் சாவுக்கு காரணமான ஆன்லைன் பைனான்ஸ் நிறுவனம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். பின்னர், அவரது பெற்றோர் போலீசில் புகார்  அளித்தனர். அதன்பேரில் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். குன்றத்தூர்: குன்றத்தூர் அருகே திருமுடிவாக்கம் சிப்காட் பகுதியில் உள்ள 100க்கும் மேற்பட்ட தனியார் தொழிற்சாலைகளில், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். இங்குள்ள பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் கம்பெனியில் ஷட்டர் அமைக்கும் பணி நடந்தது. அதில், அற்புதகுமார் என்பவரது தலைமையில் அனகாபுத்தூர் 11வது தெரு முருகன் (37), திருவள்ளுவர் பேட்டை நாகராஜ் (40), ஆனந்த் (42) ஆகியோர் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், நேற்று காலை 3 பேரும் வேலைக்கு சென்றனர். அங்கு, சுமார் 20 அடி நீளமுள்ள ஏணியை அவர்கள் தூக்கி சென்றபோது, எதிர்பாராதவிதமாக மேலே சென்ற உயரழுத்த மின்கம்பியில், ஏணி உரசியது. இதில், மின்சாரம் பாய்ந்து  முருகன், நாகராஜ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி இறந்தனர். ஆனந்த் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். தகவலறிந்து குன்றத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, காயமடைந்த ஆனந்தை சிகிச்சைக்காகவும், சடலங்களை பிரேத பரிசோதனைக்காகவும் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags : suicide ,Kunrathur , Young man commits suicide by jumping into well due to online credit harassment: 2 killed in Kunrattur power outage
× RELATED பிரசித்தி பெற்ற குன்றத்தூர்...