க.பரமத்தி: ராஜபுரம் பகுதியில் இருந்து அரவக்குறிச்சி செல்லும் நெடுஞ்சாலையில் காவிரி கூட்டுக்குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி வருவதை தடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் மாவட்டம் க.பரமத்தி, அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி ஆகிய பகுதிகளுக்கு கடந்த 2003ம் ஆண்டு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்திற்காக ரூ.5 கோடியில் பணிகள் துவங்கப்பட்டது. இத்திட்டத்தில் நொய்யல் அடுத்த மறவாப்பாளையம் காவிரி ஆற்றில் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு, அதிலிருந்து குழாய் மூலம் க.பரமத்தி, அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி உள்ளிட்ட 564 கிராமங்களுக்கு காவிரி கூட்டு குடிநீர் செல்லும் குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில் க.பரமத்தி ஒன்றியம் ராஜபுரம் பகுதியில் இருந்து அரவக்குறிச்சி செல்லும் வழி தடத்தில் காவிரி குடிநீர் குழாய் உடைந்துஅந்த வழியாக நெடுஞ்சாலையில் செல்வோர் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து குடிநீர் வீணாகி வருகிறது.
இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் அதிகாரிகளின் மெத்தனப் போக்கால் இன்னும் சீரமைக்கப்படவில்லை என அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இனியாவது ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.