×

2023ம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் சுதந்திரமாக ஆட்சியை பிடிப்பதே என் குறிக்கோள்: மாஜி முதல்வர் குமாரசாமி நம்பிக்கை

பெங்களூரு: 2023ம் ஆண்டு நடைபெறவுள்ள பொது தேர்தலில் மஜதவை சுதந்திரமாக அதிகாரத்துக்கு கொண்டு வருவதே என்னுடைய குறிக்கோள் என்று முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி தெரிவித்தார். பெங்களூரு ஜே.பி.நகரில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களிடம் இது தொடர்பாக குமாரசாமி கூறியதாவது: ``மாநிலத்தில் 2004ம் ஆண்டு சித்தராமையாவை துணை முதல்வர் பதவிக்கு கொண்டு வந்த போது என்னுடைய பங்களிப்பு இருந்தது. ஆனால் நான் முதல்வர் பதவிக்கு வருவதற்கு அவருடைய உழைப்பு எதுவும் கிடையாது. இதனால் என்னை குறித்து பேசும் போது எச்சரிக்கையுடன் பேச வேண்டும். அதேபோல், நான் அவருடைய ஆதரவில் இருந்தது கிடையாது. ஆனால் அவர் என்னுடைய ஆதரவில் இருந்தார். தனியார் ஓட்டலில் இருந்து கொண்டு நிர்வாகத்தை நடத்தியதாக சித்தராமையா கேவலமாக பேசுவது வேண்டாம்.

மஜத கட்சி பா.ஜ.வின் பி.டீமாக இருந்திருந்தால் காங்கிரசுடன் கூட்டணி அமைத்திருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது. கூட்டணி ஆட்சி அமைந்த நேரத்தில் காங்கிரஸ் கட்சியை ஆட்சி அமைக்க கேட்டு கொள்ளப்பட்டது. அந்த நிகழ்வில் முன்னாள் பிரதமர் எச்.டி.தேவகவுடா சித்தராமையாவின் எதிரே தெரிவித்தார். அப்போது குலாம்நபி ஆசாத், டி.கே.சிவகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.  மஜத மற்ற கட்சிகளுடன் இணைக்கப்படாது. நாங்கள் உயிருடன் இருக்கும்வரை அது நடக்காது. அதிகார ஆசைக்காக யாருடைய வீட்டின் வாசலுக்கும் செல்லவில்லை. காங்கிரஸ் கட்சியின் தற்போதைய நடவடிக்கைகள் பார்த்து தவிர்க்க முடியாத சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.  

காங்கிரஸ் கட்சியில் உள்ள சில தலைவர்கள் மஜதவிலிருந்து சென்றவர்கள். அவர்கள் மஜதவை அழிக்க முயற்சித்து வருகின்றனர். எதிர் கட்சிகள் என்ற முறையில் ஆட்சியை எப்படியும் பிடிக்க வேண்டும் என்று எதிர் பார்ப்பார்கள். கட்சியிலிருந்து விலகி சென்றவர்கள் சிலர் கருத்துக்கள் தெரிவிக்கின்றனர். என்னுடைய உண்மையான அரசியல் ஆரம்பிப்பது 2023ம் ஆண்டில் தான். அதுவரை தற்காலிகமான அரசியல் செய்து வருகிறேன்.  2023-ம் ஆண்டு நடைபெறவுள்ள பொது தேர்தலில் மஜதவை சுதந்திரமாக அதிகாரத்துக்கு கொண்டு வருவதே என்னுடைய குறிக்கோள். இதனால் எந்த கட்சியுடன் இணைக்கப்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார்.

Tags : elections ,Chief Minister , Former Chief Minister, Kumaraswamy
× RELATED டெல்லியில் கெஜ்ரிவால் மனைவி சுனிதா ரோட் ஷோ