×

பாகிஸ்தானில் இருந்து வந்த டிரோன் மூலம் எல்லையில் வீசப்பட்ட 11 கையெறி குண்டுகள்: பஞ்சாப் போலீசார் பறிமுதல்

சண்டிகர்: பஞ்சாப் மாநிலம், குர்தாஸ்பூர் மாவட்டத்தின் சலச் கிராமத்தினருகே சர்வதேச எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் ஒரு பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள வயல்வெளி ஒன்றில் மரச்சட்டத்தாலான பெட்டி ஒன்று ஞாயிற்றுக்கிழமை மாலையில் கண்டுபிடிக்கப்பட்டது. பாதுகாப்பு படை வீரர்களின் உதவியுடன் அந்த பெட்டி கைப்பற்றப்பட்டு ஆய்வு செய்தபோது, அதில் 11 கையெறி குண்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுபற்றி பஞ்சாப் காவல்துறை அதிகாரி சோகல் கூறுகையில், ‘‘கடந்த டிசம்பர் 19, 20 தேதிகளில் ஆளில்லா டிரோன் விமானம் எல்லையில் பறப்பது கண்டுபிடிக்கப்பட்டு சுட்டு வீழ்த்தப்பட்டது. இதனால் எல்லையருகே சோதனையில் பாதுகாப்பு படையுடன் பஞ்சாப் காவல்துறையும் ஈடுபட்டிருந்தது.

இந்த சோதனையில், இந்த பெட்டி கண்டுபிடிக்கப்பட்டது. ஆளில்லா டிரோன் விமானம் மூலம் இந்த மர்ம பெட்டி வீசப்பட்டிருக்கலாம்’’ என்று கூறினார். கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பாகிஸ்தான் டிரோன் மூலம் ஆயுதங்கள் வீசப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது. ஏகே47 ரக துப்பாக்கிகள், வெடிமருந்துகள், பத்திரிகைகள், கையெறி குண்டுகள், கள்ளநோட்டுகள் ஆகியவை டர்ன் தாரன் மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதுபோல் பாகிஸ்தான் எல்லையருகிலும் பலமுறை ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.


Tags : border ,Pakistan ,Punjab police , 11 grenades hurled at the border by a drone from Pakistan: Punjab police seize
× RELATED பாக். டிரோன் அத்துமீறல்