×

தேர்தல் நேரத்தில் நடக்கும் சோதனையை வரவேற்க முடியாது: ஜெயராமன், அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர்

லஞ்ச ஒழிப்புத்துறை ஒரு தன்னிச்சையான விசாரணை அமைப்பாக இருந்தால் அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட பலதரப்பட்டவர்களிடம் சோதனை நடத்த வாய்ப்பு இருக்கும். ஆனால், லஞ்ச ஒழிப்புத்துறையை தன்னிச்சையான அமைப்பாக செயல்படவிடாமல் அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால் முதலமைச்சர் என்ன சொல்கிறாரோ, அதையே கேட்டு நடக்கக்கூடிய சூழ்நிலலையில் உள்ளது. 2013 முதல் 2017ம் ஆண்டு வரை தகவல் உரிமை சட்டத்தின் மூலம் எவ்வளவு சோதனை செய்தீர்கள் என்று கேட்ட போது, 4 வருடத்தில் வெறும் 4 சோதனைகள் மட்டுமே செய்யப்பட்டுள்ளது.  லஞ்ச ஒழிப்புத்துறையில் 400 ஊழியர்கள் உள்ளனர். ஒரு வருடத்துக்கு 55 கோடி ரூபாய் செலவு செய்யக்கூடிய ஒரு துறை. ஆனால், அவர்கள் தங்களின் அடிப்படை வேலையை செய்யவில்லை.

ஒவ்வொரு துறையிலும் லஞ்சம் வாங்கக்கூடிய ஆட்கள் நிறைய பேர் உள்ளார்கள் என்பது தெரியும். அப்படி தெரிந்தும் நான்கு வருடத்தில் எந்த திடீர் சோதனையும் செய்ய வேண்டாம் என்று மேலிடத்தில் இருந்து ஒரு உத்தரவு போட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறையில் இருப்பவர்கள் எங்களிடம் தெரிவித்தார்கள். அந்த அளவிற்கு லஞ்ச ஒழிப்புத்துறையை தன்னுடைய கட்டுப்பாட்டில் தமிழக அரசு வைத்துள்ளது. 2017ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி ஒரு பரப்புரை செய்தோம். அதன்பிறகு வருடத்திற்கு 150 சோதனையை செய்ய ஆரம்பித்தார்கள். ஆனால், ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான திடீர் சோதனையை செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் 3 திடீர் சோதனை செய்தால் கூட மாதத்திற்கு 100 சோதனைகளையாவது செய்ய முடியும்.

இதுபோன்ற சூழலில் தேர்தல் நெருங்கும் நேரத்தில் இவர்கள் திடீர் சோதனை செய்வதை முழுமையாக வரவேற்க முடியாது. குறிப்பிட்டு தேர்ந்தெடுத்த துறைகளை மட்டும் சோதனை செய்கின்றனர். பொதுப்பணித்துறை, மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை, உள்ளாட்சித்துறை போன்ற துறைகளில் கோடிக்கணக்கில் லஞ்சம் கைமாறுகிறது. ஆனால், இந்த துறைகளில் எப்போதுமே சோதனை செய்வது கிடையாது. இந்த துறையில் உள்ள அதிகாரிகளையும், அமைச்சர்களையும் சோதனை செய்யாதது ஏன் என்ற கேள்வி எழுகிறது. எனவே, நேர்மையாக அனைத்து துறைகளையும் சரியாக கையாண்டு திடீர் சோதனையை செய்ய வேண்டும்.

இதேபோல், நாங்கள் ஊழல் குறித்து 8 புகார்களை லஞ்ச ஒழிப்புத்துறையிடம் கொடுத்தோம். என்னென்ன ஊழல்களை அமைச்சர்கள் செய்தார்கள் என்று அந்த புகாரில் தெரிவித்துள்ளோம். ஆனால், இதுவரையில் ஒரு அமைச்சர் வீட்டில் கூட சோதனை நடத்தவில்லை. எனவே, அரசியல்வாதிகளின் கைப்பாவையாகவே லஞ்ச ஒழிப்புத்துறை செயல்படுகிறது என்பதை காணமுடிகிறது. லஞ்ச ஒழிப்புத்துறை ஏன் கடந்த ஓரிரு மாதங்களில் மட்டும் இந்த அளவிற்கு சோதனை நடத்தப்படுகிறது என்பதற்கான விளக்கத்தை தெரிவிக்க வேண்டும். இப்படி தொடர் சோதனைகள் செய்வதன் மூலம் மட்டுமே அனைத்துத்துறை அதிகாரிகளுக்கும் ஒரு பயம் ஏற்படும். கடந்த ஓரிரு மாதத்தில் செய்த சோதனையை கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் செய்திருந்தார்கள் என்றால் லஞ்சம், ஊழலை கட்டுக்குள் கொண்டுவந்திருக்கலாம்.

இப்போது இருக்கும் சூழ்நிலையில் அதிகாரிகளை மட்டுமே இவர்களால் சோதனை செய்ய முடியும். அமைச்சர்களின் வீடுகளில் சோதனை செய்ய முடியாது. பொதுவான ஒரு அமைப்பாக இருந்தால் லஞ்ச ஒழிப்புத்துறை மீது கண்டிப்பாக மக்களுக்கு ஒரு நம்பிக்கை வரும். பொதுப்பணித்துறை, மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை, உள்ளாட்சித்துறை போன்ற துறைகளில் கோடிக்கணக்கில் லஞ்சம் கைமாறுகிறது. ஆனால், இந்த துறைகளில் எப்போதுமே சோதனை செய்வது கிடையாது.

* லஞ்ச ஒழிப்புத் துறை பல் இல்லாத ஒன்றாக பரிதாபமாக இருக்கிறது: செந்தில் ஆறுமுகம், சட்டப்பஞ்சாயத்து இயக்க மாநில பொதுச் செயலாளர்
அதிமுக ஆட்சியில் கொள்ளை அடிப்பதே எங்கள் கொள்கை என்பதே அடிப்படையாக உள்ளது. இதற்கு மூன்று வழிமுறைகள் ஆட்சியாளர்கள் பின்பற்றுகிறார்கள். அதாவது, தேர்தலை நடத்தாமல் உள்ளாட்சித்துறையை முழுமையாக தங்கள் கைக்குள் வைத்துக்கொள்வது. தமிழகத்தில் நீண்ட காலமாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் இருக்கிறது. இதற்கு பல்வேறு காரணங்களை கூறுகிறார்கள். உள்ளாட்சித்துறை தான் அதிகம் பணம் புழங்கும் துறையாக உள்ளது. இதேபோல், கிராமசபை கூட்டங்களையும் நடத்தவில்லை. இதன் மூலம், ஊழலுக்கான வழிமுறைகளை சரியாக பின்பற்றுகின்றனர்.

மேலும், யாராவது ஊழல் புகார் தெரிவிக்க வேண்டும் என்றால் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் தான் தெரிவிக்க வேண்டும். ஆனால், லஞ்ச ஒழிப்புத்துறை பல் இல்லாத ஒன்றாக போய்விட்டது என்பது அனைவருக்கும் தெரியும். அதிகாரிகள், அமைச்சர்கள் மீது எந்த புகார்கள் தெரிவித்தாலும் முகாந்திரம் இல்லை எனக்கூறி நிராகரிப்பதையே பார்த்திருக்கிறோம். முதலமைச்சர் தன்னுடைய உறவினர்களுக்கு டெண்டர் கொடுத்த விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த முகாந்திரம் இல்லை எனக்கூறியது. ஆனால், நீதிமன்றமோ இதில் முகாந்திரம் இருக்கிறது எனவே சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றது.

ஒரு முதல்வர் மேல் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்பது இதுவே முதல்முறை. இதேபோல் வேலுமணி, தங்கமணி போன்ற அமைச்சர்களின் துறைகளிலும் ஊழலும், லஞ்சமும் அதிகமாக இருக்கிறது. மேலும், பாஜக தன்னுடைய அரசியல் ஆதாயத்திற்காக அதிமுக உடன் இருந்து அவர்கள் செய்யும் ஊழல்களை கண்டுகொள்ளாமல் இருந்துவிடுகின்றனர். இருவருக்கும் இடையே இதுபோன்ற ஒப்பந்தம் முறையிலேயே கூட்டணி இருக்கிறது. லோக் ஆயுக்தா அமைப்பை செயல்படவிடாமல் செய்துள்ளார்கள். ஆனால், கர்நாடகாவில் லோக் ஆயுக்தா தான் எடியூரப்பாவை சிறைக்கு அனுப்பியது.

தமிழகத்தில் லோக் ஆயுக்தா அட்டக்கத்தி போன்ற ஒரு அமைப்பாகவே உள்ளது. அமைச்சர்கள் மீது ஊழல் புகார்கள் கொடுத்தால் பெயரளவிற்கு மட்டுமே அதை எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால், எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை. விசாரனை மேற்கொள்வது இல்லை. தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைத்ததோடு சரி அதற்கு பிறகு அது எங்கு இருக்கிறது. எப்படி செயல்படுகிறது என்பதே தெரியாமல் போய்விட்டது. கொரோனா தாக்கத்தால் பணமே இல்லை என்று கூறிய தமிழக அரசு பொங்கல் தொகுப்பாக ரூ.2,500ஐ கொடுக்கிறது. இதுவும் அரசியல் ஆதாயத்திற்காகவே கொடுக்கும் பணமாக பார்க்கப்படுகிறது.

கொரோனாவால் மக்கள் வாழ்வாதாரம் முடங்கி போய் உள்ளது எனவே ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்த போது கைவிரித்துவிட்டு இப்போது மட்டும் பணம் கொடுக்கிறார்கள். தற்போது உள்ள சூழலில் அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக வெளியே சென்றால் அதிமுக ஆட்சி ஊழல் ஆட்சி என்று சோதனை மேல் சோதனையை செய்து முழுவதுமாக ஆட்சியை கலைத்துவிடுவார்கள். இந்தநிலை தான் இப்போது உள்ளது. இதனால், தமிழக அரசு தங்களை காப்பாற்றிக்கொள்ள பெரிய அளவில் திருடியவர்களை விட்டுவிட்டு அரசியல் நேரத்தில் சிறிய அளவில் திருடியவர்களை மட்டுமே குறிவைத்து அரசியல் ஆதாயத்திற்காக சோதனை செய்கிறார்கள்.

சாதாரண ஊழியர் வீட்டில் 1 கோடி ரூபாய்க்கும் மேல் இப்போது பிடிக்க முடிகிறது என்றால் அந்த துறையில் உள்ள உயர் அதிகாரி மற்றும் அமைச்சரின் வீடுகளில் மட்டும் எவ்வளவு எடுக்க முடியும் என்பதை யூகித்துக்கூட பார்க்க முடிய
வில்லை. கர்நாடகாவில் லோக் ஆயுக்தா தான்  எடியூரப்பாவை சிறைக்கு அனுப்பியது. ஆனால், தமிழகத்தில் லோக் ஆயுக்தா அட்டக்கத்தி போன்ற ஒரு அமைப்பாகவே உள்ளது. அமைச்சர்கள் மீது ஊழல் புகார்கள் கொடுத்தால் பெயரளவிற்கு
மட்டுமே அதை எடுத்துக்கொள்கிறார்கள்.

Tags : Jayaraman ,election ,Crusades Movement , The test at election time is not to be welcomed: Jayaraman, Coordinator of the Crusades Movement
× RELATED அடையாளம் தெரியாத வாகனம் மோதி பைக்கில் சென்ற கல்லூரி ஊழியர் பலி