சித்தாமூர் அருகே சோகம் டிராக்டரில் சிக்கி சிறுவன் பலி

செய்யூர்: செய்யூர் அருகே டிராக்டர் உழவு கலப்பையில் சிக்கி தந்தை கண்ணெதிரிலேயே 4 வயது மகன்  சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான். செய்யூர் அடுத்த புளிகொரடு கிராமத்தை சேர்ந்தவர் லோகநாதன். விவசாயியான இவருக்கு  4 வயதில் சக்தி என்ற மகன் உள்ளார். லோகநாதன் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் அவ்வப்போது டிராக்டரில் உழவு ஓட்டும் போது சக்தியும் டிராக்டரில் உடன் அமர்ந்து இருப்பது வழக்கம். நேற்று காலை லோகநாதன் வழக்கம்போல் தனது டிராக்டரில் உழவு பணியில் ஈடுபட்டபோது, தனது மகனை அருகில் அமர்த்திக் கொண்டு உழவு ஓட்டிக்கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக சிறுவன் சக்தி டிராக்டரில் இருந்து தவறி விழுந்து டிராக்டரின் பின்னால் இருந்த உழவு கலப்பையில் சிக்கிக்கொண்டார்.

இதனையறிந்து, உடனடியாக லோகநாதன் டிராக்டரை நிறுத்திவிட்டு உழவு கலப்பையில் சிக்கிய தனது மகனை போராடி மீட்டார். ஆனால், சிறுவன் சக்தி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற சித்தாமூர் போலீசார் இறந்த சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து சித்தாமூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சிறுவன் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories:

>