×

ஜனவரி முதல் வாரத்தில் மு.க.ஸ்டாலின் பிரசாரம் தொடங்குகிறார்: 200க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற திமுக இலக்கு

சென்னை: சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு ஜனவரி முதல் வாரத்தில் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். 200க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று திமுக இலக்கை நிர்ணயித்துள்ளது. தமிழக சட்டப்பேரவை ெபாதுத் தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரலில் நடைபெற உள்ளது. தேர்தலை சந்திக்க திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாவட்டம் வாரியாக நடைபெற்ற திமுக முப்பெரும் விழா பொதுக்கூட்டத்தில் காணொலி காட்சி மூலமாக பங்கேற்று பேசினார்.

தொடர்ந்து அவர் மண்டலம் வாரியாக நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார். இப்போது காணொலிக் காட்சி மூலமாக “தமிழகம் மீட்போம்” எனும் தலைப்பிலான “2021- சட்டமன்றத் தேர்தலுக்கான சிறப்பு பொதுக்கூட்டங்களில்” கலந்து கொண்டு மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார். இதில், தேர்தல் தொடர்பாக பல்வேறு அறிவுரைகளை கட்சியினருக்கு வழங்கினார். வெற்றி ஒன்றையே குறிக்கோளாக கொண்டு அனைவரும் பாடுபட வேண்டும் என்றும் அப்போது அவர் வேண்டுகோள் விடுத்து வருகிறார். மேலும், திமுக முன்னணியினர் தமிழகம் முழுவதும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களை சந்தித்து கருத்துக்களையும் கேட்டு வருகின்றனர்.

இதே போல முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் நேற்று முன்தினம் தனது சொந்த ஊரான இடைப்பாடியில் பிரசாரத்தை தொடங்கினார். தொடர்ந்து அவர் பிரசாரத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளார். அதே போல மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனும் தனது பிரசாரத்தை தொடங்கியுள்ளார். தேர்தல் நெருங்கி வருவதால் தேர்தல் பிரசாரத்தை மேலும் தீவிரப்படுத்த அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் திமுக நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம் நேற்று நடந்தது.

இந்த கூட்டத்தில் 1,659 பேர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், வருகிற 23ம் தேதி முதல் அடுத்த மாதம் 10ம் தேதி வரை விடியலை நோக்கி, 16,000 கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படும். 1500 திமுக நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்பார்கள். ‘’தமிழகம் மீட்போம்’’ என்ற எனது பிரசாரக் கூட்டம் மிகுந்த எழுச்சியோடு நடந்து வருகின்றது. லட்சக்கணக்கானோர் இதில் பங்கேற்று வருகிறார்கள். அநேகமாக ஜனவரி முதல் வாரத்தில் இருந்து என்னுடைய பிரசாரப் பயணத்தை தொடங்க இருக்கிறேன்.

தேர்தல் முன்கூட்டியே வரலாம் என்றும் சொல்கிறார்கள். அதனால் நாம் முன்கூட்டியே தயாராக வேண்டும் என்பதற்காக இப்போதே தயாராகிறோம். யாருடன் கூட்டணி, யாருக்கு எத்தனை தொகுதி, என்னென்ன தொகுதி, யார் வேட்பாளர்- என்பதை எல்லாம் தலைமை முடிவு செய்து கொள்ளும். எந்த வாக்குப்பெட்டியைத் திறந்தாலும் உதயசூரியன் உதிக்க வேண்டும். அப்படி ஒரு நிலையை உருவாக்க உங்களால் முடியும். உங்களால் மட்டுமே முடியும். அதிமுகவை நிராகரிக்க வைப்போம். திமுகவை ஆட்சியில் அமர வைப்போம்.

நம்முடைய இலக்கு 200 தொகுதிகளுக்கு மேல் தான் என்று நாம் உறுதி எடுத்தாக வேண்டும். ‘மிஷன்  200’ என்ற இலக்கை நோக்கி நாம் சென்றாக வேண்டும். 200க்கு ஒரு தொகுதி அல்ல; ஒரு இஞ்ச் கூட குறையக் கூடாது. இன்று முதல் ஒவ்வொரு 24 மணி நேரமும் உழைத்தால் தான் 200க்கும் மேல் என்பது சாத்தியம் என்று கூறினார். இதைத் தொடர்ந்து தேர்தல் பணிகளை திமுகவினர் மேலும் தீவிரப்படுத்தியுள்ளனர். அதே நேரத்தில் அனைத்து கட்சி தலைவர்களும் ஜனவரிக்கு பிறகு முழுவீச்சில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். இதனால் ஜனவரிக்கு பிறகு தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரம் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Tags : MK Stalin ,campaign ,DMK ,constituencies , MK Stalin's campaign begins in the first week of January: the DMK aims to win more than 200 constituencies
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...