×

பக்கிங்காம் கால்வாயில் நிறுத்தியிருந்த விசை படகுகளில் மழைநீர் புகுந்து இன்ஜின், டைனமோக்கள் பழுது: ரூ.3 லட்சம் வரை நஷ்டம்: மீனவர்கள் கவலை

கொள்ளிடம்: கொள்ளிடம் அருகே பழையாறு கிராமத்தில் புரெவி புயல் மற்றும் கனமழையில் இருந்து பாதுகாக்க பக்கிங்காம் கால்வாயில் நிறுத்தப்பட்டிருந்த விசைப்படகுகளில் மழைநீர் புகுந்ததால் படகுகளி ன் எஞ்சின் மற்றும்  டைனமோக்கள் பழுதடைந்தன. இதனால் ஏற்பட்டுள்ள நஷ்டத்தை எண்ணி மீனவர்கள் பெரிதும் கவலையடைந்துள்ளனர்.மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழையாறு கிராமத்தில் அமைந்துள்ள மீன்பிடித் துறைமுகத்தில் 350 விசைப்படகுகள் மற்றும் 500க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் மூலம் மீனவர்கள் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர்.

 இதன் மூலம் நாள் ஒன்றுக்கு ரூ. 1 கோடிக்கு மேல் வர்த்தகம் நடைபெறும். தற்போது அதிகரித்துள்ள படகுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப துறை முகத்தில் இடவசதி இல்லை. சாலைகள், ஏலக் கூடங்கள், படகுக் கட்டும் தளம் ஆகியவை  பழுதடைந்துள்ளன. ஐஸ் பிளான்ட் பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. கழிவு நீர் கால்வாய்கள் இல்லை. படகுகள் அனைத்திற்கும் ஒரே பங்கில் டீசல் வாங்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் பேரிடர் காலங்களில்  மீனவர்கள் தங்களது படகுகளை அருகிலுள்ள பக்கிங்காம் கால்வாயில் நிறுத்துகின்றனர்.

இவ்வாறு நிறுத்தப்படும் படகுகளை மீனவர்கள் குழுஅமைத்து பாதுகாக்கின்றனர். தற்போது புரெவி புயல் மற்றும் கனமழையில் இருந்து பாதுகாக்க மீனவர்கள் தங்கள் படகுகளை பக்கிங்காம் கால்வாயில் நெருக்கமாக நிறுத்தியுள்ளனர். இந்நிலையில் சில தினங்களாக பெய்த கனமழை காரணமாக படகுகளில் மழைநீர் புகுந்து இன்ஜின் மற்றும் டைனமோக்கள் பழுதடைந்ததுடன், ஒன்றுடன் ஒன்று மோதி சிறுசிறு சேதமடைந்துள்ளன. இதனால் படகுகளுக்கு தலா ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இந்த நஷ்டத்தால் மீனவர்கள் பெரிதும் கவலையடைந்துள்ளனர். தொடர்ந்து படகுகளில் இருந்து தண்ணீரை மோட்டார் மூலம் வெளியேற் றி வரும் மீனவர்கள் தங்களது படகுகளை பேரிடர் காலங்களில் பாதுகாப்பாக நிறுத்துவதற்கு வசதியாக பக்கிங்காம் கால்வாயின் இரு கரைகளிலும் வார்ப்புகள் அமைத்துத் தர வேண்டும், துறைமுக சாலைகள், படகு கட்டும் தளம் ஆகியவற்றை சீர்செய்து, புதிய ஏலக் கூடம், ஐஸ் பிளான்ட் அமைத்துத் தர வேண்டும். அனைத்து படகுகளுக்கும் டீசல்பிடிக்க வசதியாக மேலும் ஒரு டீசல் பங்க் அமைத்துத் தர வேண்டும். பல நாட்களாக ஏற்பட்டுள்ள தொழில் பாதிப்புக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Loss ,Fishermen ,Buckingham Canal , Rainwater infiltration in key boats parked on Buckingham Canal, engine, dynamos repaired: up to Rs 3 lakh loss: Fishermen worried
× RELATED விசாகப்பட்டினத்தில் பரபரப்பு...