பேய் ஓட்டுவதாக சாமியார் பிரம்பால் அடித்ததில் வாலிபர் பரிதாப பலி

சென்னை: பழைய வண்ணாரப்பேட்டை சீனிவாசபுரம் 2வது தெருவை சேர்ந்தவர் மகபூப் பாஷா (29). இவரது மனைவி ஆயிஷா (19). சில நாட்களாக மகபூப் பாஷா வேலைக்கு செல்லாமல் பித்து பிடித்ததுபோல் வீட்டில் இருந்துள்ளார். இதை பார்த்த மனைவி ஆயிஷா, முதலில் தர்காவுக்கு கொண்டு சென்று இரண்டு நாள் அவரை தங்க வைத்தார். அப்படியும், மகபூப் ஷாவுக்கு சரி ஆகவில்லை. எனவே, ஆயிஷா தனது கணவரை  கடந்த  ஜூன் 9ம் தேதி  செங்குன்றம் அடுத்த லட்சுமிபுரம் கோதண்ட பெருமாள் கோயில் தெருவில் குறிமேடை நடத்தி வரும் சாமியார் சங்கர் (49) என்பவரிடம் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, சாமியார் சங்கர், மகபூப் பாஷாவிற்கு பேய் பிடித்துள்ளதாகவும், இதை விரட்ட வேண்டும் எனில், இங்கு 10 நாட்கள் தங்கி பூஜை செய்யவேண்டும் எனக் கூறி உள்ளார்.

இதை நம்பிய ஆயிஷா கணவருடன் அங்கு தங்கி உள்ளார். சங்கர் தினமும் மகபூப்பாஷாவிற்கு பேய் விரட்டுகிறேன் என சொல்லி பிரம்பால் அடித்து உள்ளார். இந்நிலையில் மகபூப் பாஷாவிற்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இதுகுறித்து, மனைவி ஆயிஷா வண்ணாரப்பேட்டை போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், மகபூப் பாஷாவின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தது. அதில் மகபூப் பாஷா பிரம்பால் பலமாக அடித்ததால் ரத்த நரம்புகள் அறுபட்டு மூச்சுத் திணறல் ஏற்பட்டு பலியானதாக தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து, வண்ணாரப்பேட்டை போலீசார் சாமியார் சங்கரை நேற்று கைது செய்தனர்.

Related Stories: