புதுடெல்லி: இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பு நிர்வாகிகள் மீது பிரபல குத்துச்சண்டை வீரர் மனோஜ்குமார் சரமாரியாக குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். அதனை தீர்க்க பிரதமருக்கு கோரிக்கை விடுத்து, கடிதமும் எழுதியுள்ளார். இந்தியாவின் பிரபல குத்துச் சண்டை வீரர் மனோஜ்குமார்(34). அரியானா மாநிலத்தைச் சேர்ந்த இவர் காமன் வெல்த் போட்டியில் 2010ம் ஆண்டு தங்கம், 2018ம் ஆண்டு வெண்கலம் வென்றவர். இந்நிலையில் இந்திய குத்துச் சண்டை கூட்டமைப்பு(பிஎப்ஐ) மீது சரமாரியான குற்றச்சாட்டுகளை தெரிவித்து பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் மனோஜ்குமார் கூறியிருப்பதாவது:
பிஎப்ஐ தலைவராக அஜய் சிங் வந்த பிறகு கடந்த 4 ஆண்டுகளாக கூட்டமைப்பு நிர்வாகம் சீரழிந்து விட்டது. இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்புக்கு டிச.31ம் தேதிக்குள் நிர்வாகிகள் தேர்தல் நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. தலைவர் பதவிக்கு ஆஷிஷ் ஷிலர் போட்டியிட்டதால், பயந்துப்போன அஜய்சிங் தேர்தலை தள்ளி வைத்து விட்டார். ஆனால் தள்ளி வைப்புக்கு கொரோனாவை காரணம் காட்டுகிறார். அதே நேரத்தில் கொரோனா பரவலுக்கு இடையில் மற்ற விளையாட்டு சங்கங்கள் தேர்தலை நடத்தியுள்ளன. அவரால் செயல் இயக்குநராக நியமிக்கப்பட்ட ராஜ் சச்சேடி எல்லோரையும் மிரட்டுகிறார்.
மேலும் 2010 நடந்த காமன் வெல்த் போட்டி ஊழலில் ராஜ் சச்சேடியின் பெயரும் இடம் பெற்றது. பலமுறை வீடு உட்பட அவர் சம்பந்தப்பட்ட பல இடங்களில் சோதனைகள் நடந்தன. அப்படி பட்டவருக்குதான் முக்கிய பதவியை தந்துள்ளார் அஜய்சிங். கூட்டமைப்பின் மொத்த கட்டுபாடும் சச்சேட்டியின் கட்டுபாட்டில்தான் உள்ளது. அசாமின் கவுகாத்தியில் 2019ம் ஆண்டு இந்தியா ஓபன் குத்துச்சண்டை போட்டி நடந்தது. அதில் உஸ்பெஸ்கிஸ்தான் வீரர்கள் பங்கேற்பதாக கணக்கு காட்டப்பட்டது. ஆனால் அந்நாட்டில் இருந்து யாரும் வரவில்லை. ஆனால் உஸ்பெஸ்கிஸ்தான் வீரருக்கு வெண்கலப் பதக்கம் வழங்கப்பட்டதாக கணக்கு காட்டினர். இது மிகப்பெரிய மோசடி.
வீரர்களின் உரிமைக்காக குரல் தந்ததற்காக ஓரங்கட்டப்பட்டேன். அது குறித்து ஒருமுறை விளையாட்டுத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதினேன். உடனே ராஜ் சச்சேடி,‘இப்படி புகார் அனுப்பியதற்கான விலையை நீ கட்டாயம் கொடுக்க வேண்டியிருக்கும்’ என்று மிரட்டினார். அஜய்சிங், ராஜ் சச்சேடி போன்றவர்களின் முறைகேடுகளால், சர்வதேச குத்துச்சண்டை கூட்டமைப்பு, பிஎப்ஐ மீது நடவடிக்கைகள் எடுக்கக்கூடும். ஏன் தடை கூட விதிக்கலாம். அதனால் குத்துச்சண்டை வீரர்கள் தான் பாதிக்கப்படுவார்கள்.எனவே பிரதமர் அவர்கள் உடனடியாக தலையிட்டு பிஎப்ஐ அமைப்பையும், வீரர்களின் எதிர்காலத்தையும் காப்பாற்ற ேவண்டும்.