×

ஐடி-பிடி தொழிற்சாலைகளில் கன்னடர்களுக்கு வேலைவாய்ப்பு: தொழில்துறை சட்டத்தில் திருத்தம் செய்ய அரசு முடிவு

பெங்களூரு: கடந்தாண்டு நடந்த அகில இந்திய 85வது கன்னட இலக்கிய கழக மாநாட்டிற்கு தலைமையேற்று பேசிய முற்போக்கு இலக்கிய எழுத்தாளர் சந்திரசேகர் பாட்டீல், தனியார் துறையில் கன்னடர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வசதியாக சட்ட திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று கூறினார். இதுதொடர்பாக அம்மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றி அரசிடம் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் வரும் பிப்ரவரி மாதம் 86வது கன்னட இலக்கிய மாநாடு நடக்கிறது. அதற்குள் கடந்த மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானத்தை செயல்படுத்தவில்லை எனில், வரும் பிப்ரவரி மாதம் நடக்கும் மாநாட்டில் கேள்வி எழுப்புவார்கள். அதை தவிர்க்கும் வகையில் மாநிலத்தில் இயங்கிவரும் தகவல் மற்றும் உயிரி தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்பட அனைத்து தனியார் நிறுவனங்களிலும் கன்னடர்களுக்கு 100 சதவீதம் வேலை வாய்ப்பு வழங்கும் வகையில் கர்நாடக தொழில் விதிமுறைகள் சட்டம்-1961ல் திருத்தம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக முதல்வர் எடியூரப்பா, சட்ட அமைச்சர் ஜே.சி.மாதுசாமி மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சிவராம் ஹெப்பார் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். அதை தொடர்ந்து அரசு அதிகாரிகள், சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினர். இது குறித்து அமைச்சர் சிவராம் ஹெப்பார் கூறும்போது, மாநிலத்தில் தொழிற்சாலை தொடங்க முன்வரும் தனியார் நிறுவனங்களுக்கு நிலம், நீர், மின்சாரம் உள்பட அனைத்து அடிப்படை வசதிகளும் மாநில அரசின் சார்பில் செய்து கொடுக்கப்படுகிறது. ஆனால் வேலை வாய்ப்பு வழங்கும்போது கர்நாடகாவை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை கொடுக்காமல், வெளி மாநிலத்தினருக்கு வழங்கப்படுகிறது. அதை தடுக்கும் நோக்கத்தில் கர்நாடக தொழில் விதிமுறைகள் சட்டம்-1961ல் திருத்தம் செய்ய முடிவு செய்துள்ளோம். அதற்கான சட்ட மசோதா வரும் சட்டபேரவை கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என்றார்.



Tags : Kannadas , Employment for Kannadas in IT-BT Industries: Government Decision to Amend Industrial Law
× RELATED குடியரசு தின அணிவகுப்பில் கர்நாடக...