×

உச்சநீதிமன்றத்தை நாடலாம்: கூடுதல் மருத்துவ இடங்களை ஏற்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட முடியாது: NMC ஐகோர்ட்டில் வாதம்.!!!

சென்னை: மருத்துவப்படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% ஒதுக்கீட்டில் தனியார் கல்லூரிகளில் இடம் கிடைத்தும் கட்டணம் செலுத்த முடியாத காரணத்தினால் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவிகள் தர்ஷினி மற்றும் இளக்கியா காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து, 7.5% ஒதுக்கீட்டில் தனியார் கல்லூரிகளில் சேரும் அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசு ஏற்கும் என தமிழக அரசு கடந்த நவம்பர் 20-ம் தேதி அறிவித்தது. இதற்கிடையே, கட்டணத்தை தமிழக அரசு ஏற்கும் என்ற அறிவிப்பை முன்தேதியிட்டு அமல்படுத்த கடலூர் மாணவிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வேங்கடேசன் அமர்வு முன்பு கடந்த சில தினங்களுக்கு முன் விசாரணைக்கு வந்தபோது,

51 மாணவர்களுக்கும் இடங்கள் கிடைக்க தமிழகத்தில் உள்ள 24 அரசு மருத்துவ கல்லூரிகளில் தலா 2 இடங்களை அதிகரிக்க முடியுமா? என்று தேசிய மருத்துவ ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை டிசம்பர் 17-ம் தேதி இன்றைய தினத்திற்கு நீதிபதி ஒத்தி வைத்துள்ளார்.

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் பதிலளித்த தேசிய மருத்துவ ஆணையம், கூடுதல் மருத்துவ இடங்களை ஏற்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட முடியாது. 7.5% உள்ஒதுக்கீட்டில் இடம் கிடைக்காத மாணவர்கள் கூடுதல் இடங்களுக்கு உச்சநீதிமன்றத்தை அணுகலாம் என்று தெரிவித்துள்ளது. அகில இந்திய ஒதுக்கீட்டில் 227 இடங்கள் மீண்டும் தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. 227 இடங்களில் 26 இடங்கள் 7.5% உள்ஒதுக்கீட்டின் கீழ் கிடைக்கும் என்று தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது. தொடர்ந்து, வழக்கின் விசாரணையை நாளைய தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.


Tags : Supreme Court: High Court ,places ,NMC , Seek Supreme Court: High Court cannot order additional medical seats: Argument in NMC iCourt !!!
× RELATED கலெக்டர் அலுவலக வளாகம் உட்பட குமரியில் 18 இடங்களில் தானியங்கி மழைமானி