×

ஆண்டிபட்டி கரட்டுபட்டியில் சரளை கொட்டியதோடு நிற்கும் சாலை பணி

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே கரட்டுப்பட்டியில் சரளை கற்கள் கொட்டியதோடு புதிய சாலை பணி கிடப்பில் கிடப்பதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஆண்டிபட்டி ஒன்றியம், கோவில்பட்டி ஊராட்சிக்குட்பட்டது கரட்டுப்பட்டி கிராமம். இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் விவசாயத்தையும், கால்நடை வளர்ப்பையும் முக்கிய தொழிலாக கொண்டுள்ளனர். இங்கு விளையும் பொருட்களை தேனி, ஆண்டிபட்டி சந்தை பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். இவ்வூருக்கு அரசு பேருந்து சேவை காலை, மாலை என 2 நேரங்கள் உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் அடிப்படை தேவைகளுக்கு சென்று வர இப்பேருந்துகளை மட்டுமே நம்பியுள்ளனர்.

இதற்கிடையே பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட இவ்வூர் சாலை சேதமடைந்ததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வந்தனர். பின்னர் மக்களின் தொடர் கோரிக்கையை ஏற்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு கரட்டுப்பட்டிக்கு புதிய சாலை அமைக்க ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தொடர்ந்து புதிய சாலை பணிக்காக பழைய சாலையை தோண்டினர். தொடர்ந்து சரளை கற்களை சாலையோரம் கொட்டி குவித்து வைத்தனர். அதன்பின் எந்தவொரு பணியும் செய்யாமல் இன்று வரை கிடப்பில் போட்டுள்ளனர். இதனால் தோண்டப்ட்ட சாலை மேலும் குண்டும், குழியுமாக மாறியது. இதை காரணம் காட்டி இவ்வூருக்கு இயக்கி வந்த அரசு பஸ்சையும் நிறுத்தி விட்டனர். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் சாலை, பஸ் வசதியின்றி கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதுகுறித்து கரட்டுப்பட்டி மக்கள் கூறுகையில், ’எங்கள் ஊரில் பல ஆண்டுகளாக கழிவுநீர் கால்வாய், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. தற்போது சேதமடைந்த சாலையை புதுப்பிப்பதாக தோண்டி பல வாரங்கள் ஆன நிலையில் எந்தவித பணிகளும் நடைபெறவில்லை. இதனால் நோயாளிகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் நடந்து செல்லவே சிரமப்படுகின்றனர். இச்சாலையின் நிலையால் இயக்கப்பட்ட அரசு பஸ்சையும் நிறு்த்தி விட்டனர். இதனால் அவசர காலங்களில் மருத்துவமனைக்கு செல்ல ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் நிறுத்தப்பட்ட சாலை பணியை உடனே துவக்கி விரைவில் முடித்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Tags : Andipatti , Andipatti
× RELATED பேரூராட்சி அலுவலகம் முற்றுகை