×

அந்தமானில் வானிலை மோசம்: தரையிறங்க முடியாமல் சென்னை திரும்பிய விமானம்

சென்னை: சென்னை உள்நாட்டு முனையத்தில் இருந்து அந்தமானிற்கு நேற்று முன்தினம் பிற்பகல் 2.15 மணிக்கு செல்ல வேண்டிய கோ ஏர்வேஸ் விமானம் ஒரு மணிநேரம் தாமதமாக மாலை 3.15 மணிக்கு 170 பயணிகளுடன் அந்தமான் புறப்பட்டு சென்றது. அந்தமானில் மாலை 5 மணிக்கு மேல் தரைக்காற்று வீசத்தொடங்கும். எனவே அப்போது விமானங்கள் தரையிறங்க அனுமதிப்பது இல்லை.

எனவே இந்த விமானம் மாலை 5.30 மணியளவில் அந்தமான் வான்வெளியை அடைந்தபோது அங்கு மோசமான வானிலை ஏற்பட்டது. எனவே விமானம் தரையிறங்காமல் நீண்டநேரம் அந்தமானில் வட்டமடித்தது. ஆனால் அங்கு வானிலை சீரடையவில்லை. இதையடுத்து விமானம் மீண்டும் நேற்று முன்தினம் இரவு சென்னைக்கு திரும்பியது.

இதனால் பயணிகள் கடும் ஆத்திரமடைந்தனர். விமானத்தை விட்டு கீழே இறங்க மறுத்து விமானத்திற்குள்ளேயே அமர்ந்திருந்து போராட்டம் நடத்தினர். இதனால் விமான நிலையத்தில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கோ ஏர்வேஸ் விமான நிறுவன அதிகாரிகள் பயணிகளிடம் சமரசம் பேசினர். இதனால் பயணிகள் வேறு வழியின்றி விமானத்தை விட்டு கீழே இறங்கினர். இதனால் விமான நிலையத்தில் இரவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னையில் இறங்கிய ஐதராபாத் விமானம்

ஐதராபாத் விமானம் சென்னையில் தரையிறங்கியது. இதனால் பயணிகள் கடும் அவதிப்பட்டனர். லண்டனிலிருந்து ஐதராபாத்திற்கு பிரிட்டீஷ் ஏர்லைன்ஸ் விமானம், 194 பயணிகளுடன் வந்தது. ஐதராபாத்தில் மோசமான வானிலை காரணமாக அங்கு தரையிறங்க முடியவில்லை. இதையடுத்து அந்த விமானம் காலை 9.50 மணிக்கு சென்னையில் தரையிறங்கியது. விமானிகள், தங்கள் பயணநேரம் முடிந்துவிட்டதாக கூறி, ஓய்வுக்கு சென்று விட்டனர். இதையடுத்து இந்த விமானம் நேற்று மாலை மீண்டும் 194 பயணிகளுடன் சென்னையிலிருந்து ஐதராபாத் சென்றது.

Tags : Andamans ,Chennai , Andaman
× RELATED அந்தமான் அருகே லேசான நிலநடுக்கம்