விவசாயிகள் போராட்டம் குறித்து அமைச்சர்கள் கருத்து: பாஜக தான் உண்மையான ‘துக்டே துக்டே’..ஷிரோமணி அகாலி தளம் தலைவர் பதிலடி

அமிர்தசரஸ்: மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த செப்டம்பரில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஷிரோமணி அகாலிதளம் விலகியது. அக்கட்சியின் பெண்  அமைச்சரும் பதவி விலகினர். தொடர்ந்து வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஷிரோமணி அகாலி தளம் போராட்டங்களை நடத்தி வருகிறது.  

இந்நிலையில், அக்கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் பாதல் கூறுகையில், ‘பிரதமர் மோடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை சந்திக்கவில்லை. மத்திய அரசின் கறுப்புச் சட்டங்களை (வேளாண் சட்டம்) உடனடியாக திரும்பப் பெற  வேண்டும்.  விவசாயிகள் போராட்டத்தை சமூக விரோத சக்திகள், தீவிர இடதுசாரி ஆதரவாளர்கள் உள்ளிட்ட அமைப்புகள் ஊடுருவி வழிநடத்துவதாக மத்திய அமைச்சர்கள் பேசியுள்ளனர். நாட்டின் உண்மையான ‘துக்டே துக்டே’ கும்பல்  (சிறு சிறு குழுக்கள்) எதுவென்றால் பாஜக கட்சிதான்.

பாஜ கட்சி இரு வகுப்பு மக்கள் இடையே ஒரு இனவாத பிளவுகளை  ஏற்படுத்தி வருகிறது. சீக்கியர்களுக்கு எதிராக  பஞ்சாபி இந்துக்களை உருவாக்க பாஜக முயற்சித்தது. மத்திய அரசு தனது ‘ஈகோ’வை ஒதுக்கி  வைத்துவிட்டு, வேளாண்  சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க வேண்டும். மத்திய ஆளும் ஆட்சிக்கு எதிராக  யார் பேசினாலும், அவர்களை ‘கும்பல்கள்’ என்று பாஜக முத்திரை  குத்துகிறது’ என்று காட்டமாக கூறினார்.

Related Stories:

More