×

இமயமலையில் இருந்து கோடியக்கரைக்கு 58 ஆண்டுகளுக்கு பிறகு வந்த ‘‘ஹிமாலய கிரிபன் கழுகு’’

வேதாரண்யம்: கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு 58 ஆண்டுகளுக்கு பிறகு இமயமலையில் இருந்து ‘ஹிமாலய கிரிபன் கழுகு’ நேற்று வந்துள்ளது. நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் அக்டோபர் முதல் மார்ச் வரை சைபீரியா, ஈரான், ஈராக் நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கில் 247 வகையான பறவைகளில் 50வகையான நிலப்பறவைகளும், 200 நீர்ப்பறவைகளும் ஆண்டுதோறும் சீசன் காலங்களில் வந்து செல்கிறது. இந்த பறவைகள் சரணாலயத்திற்கு, 4 அடி உயரமுள்ள அழகுமிகு பூநாரை (பிளமிங்கோ) கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு தனிச் சிறப்பு சேர்க்கும். கொசுஉள்ளான், கூழைக்கிடா, லடாக்கில் இருந்து சிவப்பு கால் உள்ளான், ஆஸ்திரேலியாவிலிருந்து வரித்தலை வாத்து, உள்நாட்டு பறவைகளான செங்கால்நாரை, ரஷ்யாவிலிருந்து வரும் சிறவி வகைகள், இலங்கையிலிருந்து வரும் கடல்காகம், ஆர்க்டிக் பிரதேசத்திலிருந்து வருகை தரும் ஆர்க்டிக்டேன்(ஆலா) இமாச்சலப்பிரதேசத்திலிருந்து வரும் இன்டியன் பிட்டா (காச்சலாத்தி) உள்ளான் வகைப் பறவைகள் வந்து செல்கின்றன.

இந்நிலையில் 1963ம் ஆண்டு இந்த சரணாலயத்திற்கு இமயமலையில் இருந்து ஹிமாலய கிரிபன் கழுகு வந்து சென்றது. தற்போது 58 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று கோடியக்கரைக்கு மீண்டும் ஹிமாலய கிரிபன் கழுகு வந்துள்ளது. இதில் 9வகையான கழுகுகள் காணப்படுகின்றன. யூரேசியன் கிரிபன் கழுகு மற்றும் ஹிமாலய கிரிபன் கழுகுகள் உலகில் பழமை வாய்ந்ததாகும். இந்த பழமை வாய்ந்த ஹிமாலய கிரிபன் வகையை சேர்ந்த கழுகுகள், பருவ நிலை மாற்றத்தால் உடலின் சீதோஷ்ண நிலையை சீராக வைத்துக்கொள்ள தற்போது ஹிமாலயன் மலைப்பகுதிகளில் இருந்து வேதாரண்யம் கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு புலம்பெயர்ந்து வந்துள்ளன. இந்த கழுகு 25 கிலோ எடை கொண்டது.இறந்த மாட்டை அரை மணி நேரத்தில் உண்ணக்கூடியவையாகும். இமயமலையில் பருவநிலை மாற்றம், பனிப்புயல் காரணமாக இடம்பெயர்ந்து கோடியக்கரைக்கு வந்துள்ளது.ஒரு சில நாட்கள் தங்கிவிட்டு மீண்டும் இமயமலைக்கே சென்று விடும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Himalayas , Eagle
× RELATED உலகின் உயரமான போர்க்களம் சியாச்சின்...