×

இருக்கு... ஆனா.. இல்ல.. பராமரிப்பின்றி பாழாகும் ஹென்றிஸ் வார்டு: தங்கவயல் நகரசபை நடவடிக்கை எடுக்குமா?

தங்கவயல்: தங்கவயலில் தெரு விளக்குகள் எரியாத இருண்ட நிலையில் ஹென்றிஸ் வார்டு உள்ளது. தங்கவயல் நகரசபையின் எண் 6வது ஹென்றிஸ் வார்டில் ஹென்றிஸ் 1, மற்றும் 2வது லைன்கள், உக்கட் கோட்டரஸ் ஈரோட்டு லைன், டிரைவர்கள் லைன், போலீஸ் லைன், நீயு மாடல் ஹவுஸ், பி.இ.எம்.எல்.ஏ.டைப், எட்டு வீடு லைன், உள்ளிட்ட பகுதிகள் அடங்கி உள்ளன. இதே வார்டில் ஆர்.டி.ஓ. அலுவலகம், ஐந்து விளக்கு பகுதி, லின்ஸ்டன் மெமோரியல் பி.ஜி.எம்.எல்.பள்ளி ஆகியவையும் உள்ளன.

இதில், தங்கவயல் தங்க சுரங்க நிறுவன பொறுப்பில் இருந்த போது, பெரிய நகரங்களுக்கு மட்டுமே கிடைக்கும் நவீன வசதிகளை பெற்றிருந்தது. அதில் உரிகம் பகுதியை அடுத்து பி.இ.எம்.எல் செல்லும் சாலை சதுக்கத்தில் ஐந்து விளக்குகள் கொண்ட உயர்கோபுர கம்பம் அமைக்கப்பட்டது. அது முதல் ஐந்து விளக்கு சதுக்கம் மற்றும் ஐந்து விளக்கு பகுதி என்றும் அந்த பகுதி பெயர் விளங்கி வருகிறது. தற்போது ஐந்து விளக்கு கோபுரம் சீரான பராமரிப்பு இல்லாத காரணத்தால் விளக்குகள் எரிவதில்லை. இதனால் இரவு நேரத்தில் வாகன போக்குவரத்து நிறைந்த ஐந்து விளக்கு சாலை இருள் சூழ்ந்து கிடக்கிறது.

அது மட்டுமின்றி வார்டு முழுவதும் தெரு விளக்குகள் பழுதடைந்துள்ளதால் எரிவதில்லை என்று பகுதி மக்கள் கூறுகின்றனர். பல பகுதிகளில் புதர்கள் அடர்ந்து வளர்ந்திருப்பது இயற்கை அழகுடன் காட்சி அளித்தாலும், விஷ பாம்புகள் பெருகுவதற்கு வசதியாக புதர்கள் உள்ளது.இதே வார்டில் உள்ள ஸ்கேட்டிங் ஹால் அடுத்துள்ள தெருவில் பல ஆண்டுகளாக மழை காலங்களில் கழிவு நீர் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் தெருவில் ஓடி குடியிருப்பு வாசிகளுக்கு சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. இந்த கழிவு நீர் கால்வாய்கள் அமைக்கும் போது, அதில் கழிவு நீர் தேங்காமல் ஓடும் வகையில் கால்வாய் கட்டுவதில்லை. அடைப்புகள் ஏற்படாமல் பராமரிப்பதில்லை. இதனால் பெரும்பாலும், கழிவு நீர் கால்வாய்கள் அடைப்பு ஏற்பட்டு பகுதி மக்களின் சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கிறது. ஹென்றிஸ் வார்டிலும் இதே நிலை தான் காணப்படுகிறது.

ஒவ்வொரு வார்டிலும் பல லட்சம் செலவில் கட்டப்பட்ட பொது கழிவறை இந்த வார்டிலும் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. பி.ஜி.எம்.எல். காலத்து பொது கழிவறைகள் பாழடைந்து பயன் இன்றி போனதால், வீட்டில் கழிவறை இல்லாத பெரும்பான்மை பகுதி மக்கள் காலை கடனை திறந்த வெளியில் கழிக்கும் அவல நிலையில் தான் உள்ளனர். அதே போல், வார்டுக்கு வார்டு கட்டப்பட்ட சுத்திகரிப்பு குடிநீர் மையம் திறக்கப்படாமல் உள்ளது.
தற்போது பொறுப்பேற்றுள்ள நகரசபையின் புதிய நிர்வாகம் வார்டில் நிலவும் அடிப்படை வசதி குறைகளை நிவர்த்தி செய்யும் என்று வார்டு மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

கைவிடப்பட்ட பராமரிப்பு பணி
ஐந்து விளக்கு சதுக்கத்தில் சுரங்க தொழிலாளியின் சிலை உள்ளது. மறுபுறம் சிறிய பூங்கா. இவை இரண்டும் பி.இ.எம்.எல். நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட நிலத்தில் இருந்ததால். இரண்டையும் பி.இ.எம்.எல்.நிறுவனம் பாதுகாவலரை நியமித்து சிறிய பூங்காவில் நீருற்று அமைத்து பராமரித்து வந்தது. தற்போது பராமரிப்பு பணியை கைவிட்டதால், தொழிலாளர் சிலை மற்றும் நீருற்று பூங்கா இரண்டும் பராமரிப்பு இல்லாத நிலையில் உள்ளது. இவற்றை நகரசபையே பொறுப்பேற்று பராமரிக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கை. அதிக குடியிருப்பு பகுதிகள் கொண்ட இந்த வார்டில் ஒரே ஒரு குப்பை சேகரிப்பு லாரி மட்டுமே வருவதால் பல இடங்களில் குப்பைகள் குவிந்திருப்பதாக பகுதி மக்கள் கூறுகின்றனர்.

Tags : Goldfields City Council ,Henry's Ward , There is ... but .. no .. ruined without maintenance Henry's Ward: Will Goldfields City Council take action?
× RELATED சிறுவர் பூங்காவில் சமூக விரோதிகள்...