×

அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீட்டுக்கு தடை இல்லை: மாணவி தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் உத்தரவு

சென்னை: மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவித இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது. தமிழகத்தில், கடந்த 2018 ஆம் ஆண்டு தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு முடித்த பூஜா என்ற மாணவி, தனது 3வது முயற்சியில் நீட் தேர்வில் 565 மதிப்பெண்கள் பெற்றார். எனினும் இவருக்கு மருத்துவ படிப்பில் இடம் கிடைக்கவில்லை.  இதையடுத்து 7.5 சதவீத இடஒதுக்கீடு சட்டத்தை எதிர்த்து பூஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இது நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் எம்.எஸ் ரமேஷ் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு பள்ளி மாணவர்களுக்காக தமிழக அரசு கொண்டு வந்த  7.5 சதவீத இட ஒதுக்கீடு காரணமாகவே அதிக மதிப்பெண்கள்  பெற்றிருந்தும் தனக்கு மருத்துவ படிப்பில் இடம் கிடைக்காமல் போனது. நீட் தேர்வில் 200 மதிப்பெண்கள் கூட தாண்டாத அரசு பள்ளி மாணவர்களுக்கு அரசு மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது நியாயமற்றது. எனவே, தமிழக அரசு  கொண்டு வந்த 7.5 சதவீத இடஒதுக்கீடு சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று உத்தரவிட வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

 வழக்கை விசாரித்த நீதிபதிகள், தற்போது அரசு மாணவர்களுக்கான ஒதுக்கீட்டில் அனைத்து மருத்துவ இடங்களும் நிரப்பப்பட்டு விட்டதால் தமிழக அரசு கொண்டுவந்த சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என்றனர். மேலும், இந்த  மனு தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், 7.5 சதவீத இடஒதுக்கீடு சட்டத்தை எதிர்த்த வழக்குகளோடு சேர்த்து இந்த வழக்கும் விசாரிக்கப்படும் என்று தெரிவித்து விசாரணையை ஜனவரி 5ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

எதிரியாக பார்க்க வேண்டாம்
ஐகோர்ட் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் மேலும் கூறியதாவது, ‘‘அரசு பள்ளிகளின் தரம் குறைவாக இருப்பதால் தான் மாணவர்களுக்கு இது போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது. அரசு பள்ளி மாணவர்களை தங்கள் வீட்டு பிள்ளைகளாக பார்க்க  வேண்டுமே தவிர  எதிரியாக பார்க்க கூடாது. ஏழை மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் சேர்க்கை  கிடைப்பதை உறுதி செய்யவே இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டுள்ளது என்றனர்.

Tags : government school students ,iCourt , No ban on 7.5% reservation for government school students: iCourt order in case of student continuation
× RELATED காப்பீட்டு நிறுவனங்கள் நிபந்தனை: ஐகோர்ட் கருத்து