×

அண்ணா பல்கலை. விடுதி மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை: 700 பேருக்கு 3 கட்டங்களாக பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரத்துறை திட்டம்..!!

சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக விடுதியில் தங்கியிள்ள 700 மாணவர்களுக்கு 3 கட்டங்களாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 2ம் தேதி முதுநிலை ஆராய்ச்சி மாணவர்களுக்கான இறுதியாண்டு வகுப்புகள் துவக்கப்பட்டன. அதனை தொடர்ந்து கடந்த 7ம் தேதி இளநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் துவங்கப்பட்டு மாணவர்கள் தங்குவதற்கான விடுதிகளும் திறக்கப்பட்டன. இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் 2 மாணவர்களுக்கு கொரோனா அறிகுறி ஏற்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக விடுதியில் உள்ள மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்த வேண்டும் என்றும் பல்கலைக்கழகம் சார்பில் சென்னை மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறைக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. விடுதியில் உள்ள மாணவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக அண்ணா பல்கலைக்கழக முதல்வர் தெரிவித்துள்ளார்.

விடுதி மாணவர்கள் 2 பேருக்கு கொரோனா அறிகுறி ஏற்பட்டதை தொடர்ந்து சென்னை மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறையினர் அண்ணா பல்கலைக்கழக விடுதியில் தங்கியுள்ள மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய திட்டமிட்டுள்ளனர். அங்குள்ள 700 மாணவர்களுக்கு 3 கட்டங்களாக பரிசோதனை மேற்கொள்ளப்படவிருக்கிறது. மாணவர்களின் பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டு அவர்கள் தனித்தனி அறையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். சென்னை ஐ.ஐ.டியில் 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மற்றொரு முன்னணி கல்வி நிலையமான அண்ணா பல்கலைக்கழகத்திலும் தொற்று அறிகுறிகள் தென்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Tags : Anna University ,hostel students ,Corona , Anna University, hostel student, corona experiment
× RELATED பதிவாளர் நியமனம் தொடர்பாக அண்ணா...