×

அதிகளவு கடன் வாங்கி குவிப்பு இந்திய அளவில் தமிழகத்துக்கு 2ம் இடம்: புதிய தகவல்கள் வெளியீடு

சென்னை: நாட்டிலேயே அதிக கடன் வாங்கி குவித்த மாநிலத்தில் தமிழகம் 2வது இடத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியாவில் கடந்த 5 ஆண்டில் அதிகளவு கடன் வாங்கி உள்ள மாநிலங்களின் பட்டியலை ஒரு ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் அதிகபட்சமாக கடன் வாங்கியதில் 2வது இடத்தில் தமிழகம் இருக்கிறது. தமிழகத்தின் சராசரி கடன் வாங்கும் அளவு 92 சதவீதமாக உள்ளது. தமிழக அரசு இந்த நிதியாண்டில் (2020-2021) மட்டும் ரூ.60 ஆயிரம் கோடி வரை மாநில வளர்ச்சி திட்டத்திற்காக கடன் வாங்கியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் ரூ.65,000 கோடி கடன் வாங்கியுள்ளது.

தமிழக அரசை பொறுத்தவரை தற்போதைய நிலையில் அன்றாட செலவுக்கான நிதியில் கூட பற்றாக்குறையில் தான் உள்ளது. இந்த நிதியாண்டின்படி, கடந்த அக்டோபர் மாதம் வரை மாநில வருவாய் ரூ.83,795 கோடியாக உள்ளது. அதேநேரம் செலவு ரூ.1,18,431 கோடியாக இருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலம் கடன் வாங்கியதில் முதல் இடத்தை பிடித்துள்ளது, தமிழகம் 2வது இடத்திலே தான் இருக்கிறது என்று ஆட்சியாளர்கள் சொல்லலாம் ஆனால், மகாராஷ்டிராவின் மக்கள் தொகை 11.42 கோடி. தமிழகத்தின் மக்கள் தொகை சுமார் 8 கோடி. அதேநேரம், கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் வட்டி கட்டும் அளவு குறைந்து கொண்டே வந்துள்ளது.

தமிழகம் மற்றும் அரியானா மாநிலத்தில் மட்டும் வட்டி கட்டும் சதவீதத்தின் அளவும் உயர்ந்துள்ளது. தமிழகத்தை போல அதிக கடன் வாங்கிய மகாராஷ்டிரத்தில் கூட தனது வட்டியை குறைத்துள்ளது. அதாவது வாங்கிய கடன் திருப்பி செலுத்தியுள்ளது. ஆனால் தமிழகம்தான் கடன் வாங்கி குவித்து வருவதுடன், அதிக வட்டியும் கட்டிக் கொண்டுள்ளது. மொத்தத்தில், தமிழக மக்கள் நிலைமைதான் பாவம். மத்திய அரசிடம் போராடி தமிழகத்திற்கு வரவேண்டிய தொகையை வாங்காமல் இப்படி மக்கள் மீது வட்டி சுமையை அதிகரிப்பது சரியான நடவடிக்கையா? என்று தமிழக அரசுக்கு தமிழக மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதில் ஒரே ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், கடன் அதிகரித்தாலும் அதற்கு இணையாக மாநில ஒட்டு மொத்த உற்பத்தியும் அதிகரித்து வருவதுதான்.

* சராசரி கடன் 92 சதவீதம்
இந்தியாவில் 5 ஆண்டுகளில் அதிக கடன் வாங்கிய மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா முதல் இடத்திலும் தமிழகம் 2ம் இடத்தில் உள்ளது. நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களின் கடன் வாங்கும் அளவு சராசரியாக 66 சதவீதம் அதிகரித்துள்ளது. தமிழகத்தின் கடன் வாங்கும் அளவு மற்ற மாநிலங்களை விட அதிகமாக இருக்கிறது. அதாவது 92 சதவீதமாக அதிகரித்துள்ளது.

* மக்களின் தலையில் எவ்வளவு கடன்?
தமிழகத்தின் வருவாய், செலவு அடிப்படையில் தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவர் மீதும் உள்ள கடன் அளவு ரூ.29 ஆயிரம் வரை இருக்கிறது என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவை பொறுத்தவரை இது ரூ.30 ஆயிரமாக உள்ளது.

* 3.5 லட்சம் கோடி கடன் அதிகரிப்பு
2011ம் ஆண்டில் தமிழக அரசின் கடன் ரூ.1,01,439 கோடி.. அது இப்போது 2020-21ம் நிதியாண்டில் ரூ.4,56,660 கோடியாக அதிகரித்துள்ளது.

Tags : Tamil Nadu ,India , Tamil Nadu ranks 2nd in India in terms of borrowing and accumulation: New information released
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...