×

வாலாஜாபாத் பேரூராட்சியில் சேறும் சகதியுமாக மாறிய அரசு மருத்துவமனை: நோயாளிகள், பொதுமக்கள் அவதி

வாலாஜாபாத்: வாலாஜாபாத் பேரூராட்சியில் உள்ள அரசு மருத்துவமனை, சேறும் சகதியுமாக மாறியுள்ளது. இதனால், இங்கு வரும் நோயாளிகளும், பொதுமக்களும் கடும் அவதியடைகின்றனர். வாலாஜாபாத் பேரூராட்சியின் 15 வார்டுகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். வாலாஜாபாத்தை சுற்றி 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. வாலாஜாபாத் மையப்பகுதியில் அரசு மருத்துவமனை செயல்படுகிறது. இங்கு சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் தினமும் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்த மருத்துவமனை, கடந்த 6 ஆண்டுகளுக்கு முன், வாலாஜாபாத் ஆரம்ப சுகாதார நிலையமாக இருந்தது. பின்னர், பொது மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. ஆனால், பெயரளவில் மட்டுமே தரம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும், எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். குறிப்பாக கழிப்பறை, குடிநீர், நோயாளிகளை சந்திக்க வருபவர்களுக்கு இடவசதி உள்பட எந்த வசதிகளும் இல்லை. இதனால் இங்கு உள்நோயாளிகள் கடும் சிரமப்படுகின்றனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்த கனமழையால், இந்த மருத்துவமனை வளாகம் முழுவதும் சேறும் சகதியுமாக மாறிவிட்டது. ஆங்காங்கே மழைநீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது. இதனால் இங்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் கடும் சிரமம் அடைகின்றனர். மேலும், இந்த வளாகம் முழுவதும் சேறும் சகதியுமாக உள்ளதால், மருத்துவமனைக்கு நடந்து செல்லும் முதியோர்களும், குழந்தைகளும் சகதியில் வழுக்கி விழுந்து படுகாயமடைகின்றனர்.
மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக உள்ளதால், அதில் கொசுக்கள் உற்பத்தியாகி, இந்த மருத்துவமனையில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு, பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படும் அபாயமும் உள்ளதாக நோயாளிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இதனை சீரமைத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய பேரூராட்சி சுகாதார அதிகாரிகள், தரம் உயர்த்தப்பட்ட மருத்துவமனையை  முழுவதும் சீரமைக்காமல் மெத்தனமாக செயல்படுவதாகவும், இதற்கு மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளை உரிய முறையில் வேலை வாங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். சுகாதாரத்தை பேணி காக்க வேண்டிய அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், பல்வேறு நோய்களை வாங்கி செல்லும் நிலையில், சுகாதாரம் இல்லாமல் இருப்பது பொதுமக்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Government hospital ,mudslide ,municipality ,suffering ,Walajabad , Government hospital turned into a mudslide in Walajabad municipality: Patients, public suffering
× RELATED பாளையங்கோட்டை சிறைக் கைதி தப்பி ஓட்டம்