×

தனி நபர் பயிர் பாதிப்புக்கு இழப்பீடு கிடைக்குமா? விவசாயிகளுக்கு பயனளிக்காத வேளாண் காப்பீடு திட்டம்: திருவண்ணாமலையில் இழப்பீடு கிடைக்காமல் ஏமாற்றம்

திருவண்ணாமலை: விவசாயிகளுக்கு வேளாண்காப்பீடு திட்டம் பயனளிக்காத நிலையில், திருவண்ணாமலையிலும், இழப்பீடு கிடைக்காமல் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இனியாவது தனிநபர் பயிர் பாதிப்புக்கு இழப்பீடு கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. விவசாயத்தை மட்டுமே முழுமையாக நம்பியிருக்கிறது திருவண்ணாமலை மாவட்டம். மாநிலத்திலேயே அதிக கிராமங்களை கொண்ட இந்த மாவட்டத்துக்கு மக்களின் வாழ்வாதாரத்தை தாங்கி நிற்க விவசாயத்தை தவிர்த்து, வேறெந்த தொழில் வாய்ப்பும் இல்லை. ஆனால், இயற்கை பேரிடர், வெள்ளம், வறட்சி, நோய் பாதிப்பு, உற்பத்தி செலவு அதிகரிப்பு, மகசூல் இழப்பு, உரம் விலையேற்றம் என்று பல்வேறு நெருக்கடியில் விவசாயம் சிக்கித் திணறுகிறது. அதோடு, இரவு பகல் உழைத்து விளைவிக்கும் வேளாண் பொருட்களுக்கு சந்தையில் நியாயமான விலையும் கிடைப்பதில்லை.

விவசாயம் தான் உலக இயக்கத்தின் உயிர்நாடி. ஆனால், லாபகரமற்ற தொழிலாக மாறிவிட்டது. விவசாயத்தை காப்பாற்ற வேண்டிய அரசும், போதிய உதவிகளை செய்யாததால், ஆண்டுதோறும் சாகுபடி பரப்பு சரிகிறது. வறுமையிலும், கடன் சுமையிலும் விவசாயிகள் சிக்கியிருக்கின்றனர். நசுக்கப்பட்ட, நலிவடைந்த தொழில்களில் விவசாயம் முதலிடம் பிடித்திருக்கிறது. உழவுத்தொழிலை உயிராக நேசித்தவர்களின் பயிர்களுக்கும், உயிர்களுக்கும் உத்திரவாதம் இல்லை. நகரமயமாக்கல் எனும் மாய வலையால், லட்சக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் தரிசானது. விவசாயிகள், தினக்கூலிகளாக பெருநகரங்களை நோக்கி நகர்ந்து வருகின்றனர்.

பருவமழை பொய்த்தல், நிலத்தடி நீர்மட்டம் சரிதல், இயற்கை சீற்றம், சமூக சிக்கல், கழுத்தை இறுக்கும் சாகுபடி செலவு, நிலையற்ற வருமானம், சுற்றுச்சூழல் சீர்கேடு போன்றவற்றால் விழிபிதுங்கி நிற்கும் விவசாயிகளுக்கு, எதிர்பாராத பெருமழையும், புயல் சீற்றமும் சவாலாக உள்ளது. வியர்வை சிந்தி, வாழ்நாள் சேமிப்பை விளைநிலத்தில் செலுத்தி, விளைச்சலுக்காக காத்திருக்கும் நேரத்தில், கனமழையோ, கடும் வறட்சியோ, நோய் தாக்குதலோ ஏற்பட்டு, விளைச்சலை முற்றிலுமாக வாரிச்சுருட்டி அழிக்கும்போது விவசாயிகள் கண்ணீரில் தவிக்கின்றனர்.

இப்படி, நெருக்கடியான நேரங்களில் விவசாயிகளுக்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்டது பயிர் காப்பீடு திட்டம். தேசிய வேளாண் காப்பீடு திட்டம் எனும் பெயரில் செயல்பட்டு, பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டமென தற்போது நடைமுறையில் உள்ளது. ஆனால், பயிர் காப்பீடு திட்டம் திருவண்ணாமலையில் விவசாயிகளுக்கு முழுமையான பயன்தரவில்லை என விவசாயிகள் வேதனை படுகின்றனர். நெல், மணிலா, கரும்பு, வாழை மற்றும் சிறு தானியங்கள், பயறு வகைகள், எண்ணெய்வித்துக்கள், வணிக தோட்டப்பயிர்கள் என அனைத்து விதமான உணவு பயிர்களுக்கும், மகசூல் இழப்பை மதிப்பிட்டு நிவாரணம் வழங்குவதுதான் இத்திட்டத்தின் நோக்கம்.

ஆனால், பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு முறையாக இழப்பீடு தொகை கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து உள்ளது. நடப்பு சம்பா பருவ சாகுபடிக்கு நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.436 காப்பீட்டுத் தொகை செலுத்தினால், ஏக்கருக்கு ரூ.29,100 இழப்பீடு கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டது. எனவே, ஆயிரக்கணக்கான விவசாயிகள் காப்பீடு திட்டத்தில் சேர்ந்துள்ளனர். வங்கிகள் அல்லது பொது-சேவை மையங்களில் காப்பீடு செய்து வசதி செய்யப்பட்டுள்ளது. சம்பா பருவ சாகுபடிக்கு காப்பீடு செய்ய கடந்த 15ம் தேதியுடன் அவகாசம் முடிந்தது. நவரை பருவ சாகுபடி தற்போது காப்பீடு செய்யப்பட்டு வருகிறது. ஆனால், வேளாண் காப்பீடு திட்டத்தில் இணைந்து, பிரிமியம் தொகை செலுத்தியிருந்தாலும், விவசாயிகள் தனி நபர் பயிர் பாதிப்புக்கு இழப்பீடு தொகை பெற முடிவதில்லை.

கடும் வறட்சி, பெரு வெள்ளம் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட வட்டாரம், உள்வட்டம் அல்லது வருவாய் கிராமம் என அரசால் தேர்வு செய்யப்படும் பகுதியில், ஒட்டுமொத்த சாகுபடி பரப்பில் 75 சதவீதம் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் மட்டுமே இழப்பீடு பெற முடியும் என்ற நிலை உள்ளது. வறட்சியால் பாதிக்கப்படும் தனியொரு விவசாயி, தன்னுடைய பயிர் பாதிப்பை தனித்தனியே மதிப்பிட்டு இழப்பீடு பெற முடிவதில்லை. அந்த வட்டாரத்துக்கு என மதிப்பிடப்படும் தொகையையே அந்த பகுதியில் உள்ள அனைத்து விவசாயிகளும் பெற வேண்டும் என்ற நிலை உள்ளது. அதோடு, கடந்த 7 ஆண்டுகளில், சராசரி மகசூல் கணக்கிடப்பட்டு, அதில் நடப்பு பருவத்தில் ஏற்படும் மகசூல் இழப்பை அதிகாரிகள் கணக்கிடுகின்றனர். எனவே, இத்திட்டத்தில் அதிக அளவில் விவசாயிகளுக்கு பயன் கிடைப்பதில்லை.

பயிர் காப்பீடு திட்டத்தில் சேரும் விவசாயிகளிடம் இருந்து, ஒவ்வொரு பயிர் பருவத்திலும் பல கோடி ரூபாய் காப்பீடு பிரிமியம் ெதாகையாக வசூலிக்கப்படுகிறது. ஆனால், அந்த தொகைக்கு இணையான தொகைகூட விவசாயிகளுக்கு வந்துசேர்வதில்லை. இழப்பீடு குறித்த புகார்களை சம்மந்தப்பட்ட இன்சூரன்ஸ் நிறுவனங்களும், வேளாண் அதிகாரிகளும் ஏற்பதில்லை. இழப்பீடு வழங்குவதற்கு உரிய பகுதியை தேர்ந்தெடுப்பதிலும் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன. எனவே, வேளாண் சாகுபடி பாதிப்பு ஏற்பட்டால், சம்மந்தப்பட்ட விவசாயி தனி நபராக இழப்பீடு பெறும் வகையில் பயிர் காப்பீடு திட்டத்தில் திருத்தம் செய்தால் மட்டுமே, இந்த காப்பீடு திட்டம் முழுமையான பயன் தரக்கூடியதாக மாறும் என விவசாயிகள் எதிர்பாரக்கின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தை புரட்டிப் போட்ட நிவர் புயல் மற்றும் புரெவி புயலால், திருவண்ணாமலை உள்ளிட்ட தமிழகத்தின் வட மாவட்டங்களில் பெரிய அளவில் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலமும், விளைச்சலும் பாதித்திருக்கிறது. மகசூல் கைக்கு வரும் நேரத்தில் பெய்த கனமழையால் நெல், வாழை, மணிலா போன்ற பயிரெல்லாம் பாழாகிவிட்டன. ஆனால், இதுவரை காப்பீடு தொடர்பான எந்த ஆய்வும் நடைபெறவில்லை. எந்தெந்த பகுதிகள் காப்பீடு திட்டத்தில் பயன்பெறும் என்ற தகவலும் வெளியாகவில்லை.

வேளாண் அதிகாரிகள், காப்பீட்டு நிறுவனம் மற்றும் புள்ளியல் துறையினர் இதுவரை கள ஆய்வு நடத்தி, இழப்பீடுக்கு தகுதியுள்ள பகுதிகளை கண்டறியவில்லை. பாதிப்பின் சுவடுகள் அழிந்த பிறகு, கள ஆய்வு நடத்தினால், அதன் உண்மைத்தன்மையை முழுமையாக அறிய வாய்ப்பில்லை என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே, இனிவரும் காலங்களில் பயிர் காப்பீடு திட்டத்தில் சேரும் விவசாயிகளுக்கு, நியாயமான இழப்பீடு கிடைக்கவும், தனியாக ஒரு விவசாயியின் விளை நிலையத்தில் ஏற்படும் பாதிப்பு, மகசூல் இழப்புக்கும் காப்பீடு திட்டத்தில் பயன் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

* தனி நபருக்கு இழப்பீடு பெறுவதற்கான வாய்ப்பு இல்லை
வேளாண் உதவி இயக்குநர் (பயிர் காப்பீடு திட்டம்) செல்வராஜ் கூறியதாவது: விவசாயிகளின் நலனுக்காக, பயிர் காப்பீடு திட்டத்தில் பல்வேறு மாற்றங்களை அரசு செய்திருக்கிறது. விவசாயிகள் சார்பில் காப்பீடு நிறுவனங்களுக்கு அரசும் தன்னுடைய பங்களிப்பாக பிரிமியம் தொகையை செலுத்துகிறது. எனவே, இத்திட்டத்தை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். உரிய காலத்தில், காப்பீடு செய்வது நல்லது. திருவண்ணாமலை மாவட்டத்தில், கடந்த 2016ம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரை சுமார் ரூ.200 கோடி வரை காப்பீடு நிறுவனங்களிடமிருந்து இழப்பீடு பெற்றுத்தரப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 15ம் தேதிக்கு முன்பு, சம்பா பருவத்தில் காப்பீடு தொகை செலுத்தியிருக்கும் விவசாயிகளுக்கு, தற்போது ஏற்பட்ட சேதத்துக்கு இழப்பீடு கிடைக்கும். அதே நேரத்தில், அரசு அறிவிக்கும் நிவாரணமும் பெற முடியும். பயிர் காப்பீடு திட்டத்தில், தனி நபருக்கு இழப்பீடு பெறுவதற்கான வாய்ப்பு தற்போது இல்லை. இனிவரும் காலங்களில் அதற்கான வாய்ப்பை அரசு நிச்சயம் ஏற்படுத்தும். நெற் பயிரை பொறுத்தவரை, ஒரு கிராமத்தில் ஏற்படும் பாதிப்பை கணக்கிட்டு, அதன் அடிப்படையில் காப்பீடு பெறும் கிராமங்கள் அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு கூறினார்.

* காப்பீடு திட்டத்தை முறையாக செயல்படுத்த வேண்டும்
உழவர் பேரவை ஒருங்கிணைப்பாளர் வாக்கடை புருஷோத்தமன் கூறியதாவது: பயிர் காப்பீடு திட்டத்தில் விவசாயிகளுக்கு பெரிய அளவில் பயன் கிடைக்கவில்லை. தற்போது, திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் மழையால் பாதித்திருக்கிறது. 50 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பயிர் சேதம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால், அதில் 10 சதவீதம் விவசாயிகளுக்கு கூட காப்பீடு திட்டத்தில் பயன் கிடைக்காது. எனவே, பயிர் காப்பீடு திட்டத்தில் ஒவ்வொரு விவசாயிக்கும் ஏற்படும் விளைச்சல் பாதிப்பை கணக்கிட்டு, இழப்பீடு பெறும் வகையில் மாற்றம் கொண்டுவர வேண்டும். ஒரு கிராமத்தில் 75 சதவீத பாதிப்பு இருந்தால் மட்டுமே இழப்பீடு பெற முடியும் என்பதை மாற்றி, சராசரி மதிப்பீட்டை குறைக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.

* பாதிப்பை முறையாக கணக்கிடுவதில்லை
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பலராமன் கூறியதாவது: புயல், வறட்சி போன்ற காலங்களில் ஏற்படும் பயிர் பாதிப்புகளை அதிகாரிகள் முறையாக நேரில் பார்வையிட்டு மதிப்பீடு செய்வதில்லை. எந்த கிராமத்தில் அதிகாரிகள் குழு நேரில் வந்து பார்வையிடுகிறது. காப்பீடு திட்டத்திற்கு தேர்வு செய்கிறது என்பதை அந்த பகுதியில் உள்ள விவசாயிகளிடம் முன்கூட்டியே தெரிவித்தால் நன்றாக இருக்கும். வேளாண் துறையினர் கள ஆய்வு நடத்தி, கடந்த 3 அல்லது 5 ஆண்டுகால உத்திரவாத மகசூலோடு ஒப்பிட்டு, நடப்பு பருவத்தின் மகசூல் எவ்வளவு குறைந்திருக்கிறது என்று கணக்கிட்டு, காப்பீட்டு தொகைக்கு பரிந்துரைக்கின்றனர். அதை முறையாக மதிப்பிடுவதில்லை. இவ்வாறு கூறினார்.


Tags : Thiruvannamalai , Can individual crop damage be compensated? Agricultural insurance scheme not beneficial to farmers: Disappointment over non-availability of compensation in Thiruvannamalai
× RELATED விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர்...