×

அதிகாரிகள் மெத்தனத்தால் காலதாமதம் புதுச்சேரி கடற்கரை சாலை விரிவாக்க திட்டம் எப்போது? கானல் நீராகிப்போன அவலம்

புதுச்சேரி: பிரெஞ்சுக்காரர்கள் நிர்மாணித்த நகரம்  புதுச்சேரி. அவர்களின் கைவண்ணத்தில்தான் இந்நகரம் இன்னும் பல்வேறு நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளை தன் பக்கம் ஈர்த்து வருகிறது. வளைவே இல்லாத நேர், நேரான வீதிகள், உயர்ந்த கட்டிடங்கள், மழைநீர் வடிந்து ஓட விசாலமான பெரிய வாய்க்கால் என அவர்கள் வடிவமைத்த புதுச்சேரியின் வெள்ளை நகரம் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளின் கால் தடங்களை சுமந்தபடி நிற்கிறது.
இந்த வெள்ளை நகரத்தில்தான் சட்டசபை, கவர்னர் மாளிகை, தலைமை செயலகம், பிரெஞ்சு தூதரகம், அரசு மருத்துவமனை, அரவிந்தர் ஆசிரமம், மணக்குள விநாயகர் கோயில், தலைமை தபால் நிலையம், பாரதி பூங்கா என புதுவையின் பல முக்கிய சிறப்பு வாய்ந்த இடங்கள் எல்லாம் அமைந்துள்ளன.

 இத்தகைய சிறப்புகள் நிறைந்த வெள்ளை நகரத்திற்குள் நுழையும் பலர் சில இடங்களுக்கு செல்வார்கள். சில இடங்கள் எங்கு இருக்கிறது என்றே தெரியாமல் திரும்பி விடுவார்கள். ஆனால் அனைத்து நபர்களும் சற்று நேரமாவது நின்றுவிட்டு செல்லலாம் என நினைக்கும் இடம் என்றால் அது புதுவை கடற்கரைதான். பிரெஞ்சுக்காரர்கள் ரசனையாக கட்டிய பிரமாண்ட கட்டிடங்களை பார்த்து லயித்தவாறு, கற்பாறைகளில் வந்து மோதும் கடல் அலைகளை ரசித்துக்கொண்டே இங்கு எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் நிற்கலாம்.  இதனால்தான் இங்கு சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி, உள்ளூர், பக்கத்து ஊர் மக்கள் எல்லாம் குடும்பத்துடன் வந்து குதூகலிக்கிறார்கள். இந்நிலையில், தற்போதுள்ள கடற்கரை சாலையை மேலும் நீட்டித்து விரிவுபடுத்த புதுவை அரசு விரும்பிய நிலையில், அதற்கான பணிகள் இன்னும் தீவிரப்படுத்தப்படாமல் உள்ளது.

பிரெஞ்சுக்காரர்கள் கடல் வழியாக வந்து புதுச்சேரிக்குள் நுழைந்த கரைப்பகுதி இப்போது அங்கில்லை. அங்கிருந்து கடல் வெகுதூரம் நகர்ந்து நகருக்குள் வந்துவிட்டது. இதனால் பழங்கால கட்டிடங்கள் எல்லாம் கடலுக்குள் சென்றுவிடும் என நினைத்து பாறை கற்களை கொட்டி தற்போதுள்ள கடற்கரை அமைக்கப்பட்டிருக்கிறது. இதையொட்டி ஒரு மேடான பகுதியும், அதற்கு கீழே சிமெண்ட் சாலையும் போடப்பட்டு கூடுதல் அழகு சேர்க்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த சாலை பழைய வடிசாராய ஆலையில் தொடங்கி, டூப்ளே சிலை வரை முடிந்து விடுகிறது.

இதை இன்னும் கூடுதலாக நீட்டிக்கும் வகையில் தெற்கு பகுதியில் 1.7 கிலோ மீட்டருக்கும், வடக்கு பகுதியில் 1.4 கிலோமீட்டருக்கு சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்கான பணிகள் திட்டமிடப்பட்டு, பொதுப்பணித்துறை நடவடிக்கையில் இறங்கியது. இந்த பணியை மத்திய அரசின் சுற்றுலாத்துறை செய்வதாகவும் இருந்தது. இதனிடையே புதுச்சேரி நகரம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டு, பல்வேறு பணிகள் அத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பஸ் நிலையத்தை நவீனமாக்குவது, நகர் முழுக்க மிதிவண்டி பகிர்வு நிலையம் அமைப்பது என நீளும் வரிசையில் கடற்கரை சாலை விரிவாக்க பணியும் சேர்க்கப்பட்டுள்ளது.

கடற்கரை சாலை விரிவாக்க திட்டத்திற்கு ஒருவழியாக விடிவு கிடைத்துவிட்டதே என நினைத்தால், ஆனால் அதற்கான பணிகள் தற்போது வரைஎதுவும் நடப்பது போல் தெரியவில்லை. கடற்கரை சாலை திட்டம் என்பது பல பணிகளை உள்ளடக்கியதாக இருக்கிறது. சாலை அமைவதற்கான தடங்கள் வரையறுக்க வேண்டும். அதில் இடையூறு இருந்தால் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும். முக்கியமாக, இதற்கான ஒப்பந்தம் வரையறுக்கப்பட வேண்டும். இதற்கான பணிகள் நடந்ததுபோல் தெரியவில்லை. இந்தாண்டு முடிய இன்னும் சில நாட்களே உள்ளன. புது வருடம் பிறக்கப்போகிறது. விரைவில் சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகப்போகிறது. கடற்கரை சாலை விரிவாக்க பணிகள் இன்னும் சில தினங்களில் தொடங்கப்பட வேண்டும். இல்லையென்றால் அத்திட்டம், மற்ற திட்டங்களைப்போல் கிடப்பில் கிடக்கும் திட்டமாகத்தான் இருக்கும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.   

* ‘பணிகள் விரைவில் தொடங்கும்’
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அனுமதியை தொடர்ந்து கடற்கரை சாலை விரிவாக்க பணிகள் விரைவில் தொடங்கும் என ஸ்மார்ட் சிட்டி திட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில்,  ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் புதுச்சேரியில் மேற்கொள்ளப்படுகின்றன. இதில் கடற்கரை சாலை விரிவாக்க திட்ட பணியும் சேர்க்கப்பட்டுள்ளது. இப்பணிகளை துவக்குவதற்கு திட்ட அறிக்கை தயார் செய்துகொண்டிருக்கிறோம். கடற்கரை பணி என்பதால் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையிடம் அனுமதி பெற வேண்டும். இதற்கான அனுமதி பெறப்பட்டு, விரைவில் டெண்டர் விட்டு, பணிகள் தொடரும். தேர்தல் அறிவிப்பு வருவதற்குள் பணிகள் தொடங்கப்பட்டு விடும், என்றனர்.

‘ மக்கள் வளம் பெறுவார்கள்’
இது குறித்து லட்சுமிநாராயணன் எம்எல்ஏ கூறுகையில்,  கடற்கரை சாலை விரிவாக்கத்தினால் குருசுகுப்பம் பகுதி வளர்ச்சி அடையும். இப்பகுதியில் உள்ளவர்களுக்கு தொழில், வியாபார வாய்ப்பு அதிகரிக்கும். தற்போது கடற்கரை பகுதிக்கு வருபவர்கள் பெரும்பாலும் காந்தி சிலை, செயற்கை மணல்திட்டு போன்ற பகுதிகளுக்கு அதிகமாக வருகிறார்கள். கடற்கரை சாலை நீட்டிக்கப்பட்டால் குருசுக்குப்பம் பகுதிக்கும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவார்கள். இவ்வாறு வருபவர்களால் வியாபாரம் பெருகும். இப்பகுதியில் புதிதாக விடுதிகள் கட்ட வாய்ப்பு கிடைக்கும். இதை கருத்தில்கொண்டு பணிகளை விரைந்து செயல்படுத்த வேண்டும். ஆனால் இந்த பணி மெதுவாக நடந்து வருகிறது. தேர்தல் காலம் நெருங்குவதால் பணிகளை விரைந்து தொடங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேசமயம் இங்குள்ள மக்களுக்கு பாதிப்பு வராமலும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும், என்றார்.


Tags : canal , When is the Puducherry Coastal Road Expansion Project Delayed by Officials? The canal is a watering hole
× RELATED கடலில் புதிய தூக்குப்பாலம் நிறுவும்...