×

தனியார் கம்பெனிக்கு ஏற்றிச்சென்ற 10 லட்சம் மதிப்புள்ள பொருட்களுடன் மினிலாரி கடத்தல்: காஞ்சிபுரம் அருகே பரபரப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே தனியார் தொழிற்சாலைக்கு பழைய உதிரிபாகங்களை ஏற்றிச்சென்ற மினிலாரி கடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடத்திச் செல்லப்பட்ட மினி லாரியில் சுமார் ரூ.10 லட்சம் மதிப்புள்ள இருசக்கர  வாகனங்களின் உதிரிபாகங்கள் கடத்தப்பட்டதாக டிரைவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.   கிருஷ்ணகிரி மாவட்டம் பூந்தமல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் சித்தராமையா மகன் மஞ்சுநாதா (28). இவர் ஓசூரில் இருந்து மினிலாரியில் இருசக்கர வாகனங்களுக்கான ஹேண்டில்பார் உள்ளிட்ட உதிரிபாகங்களை ஏற்றிக்கொண்டு ஒரகடம்  தனியார் தொழிற்சாலைக்கு வந்துள்ளார். அங்கு உதிரிபாகங்களை இறக்கி விட்டு அங்கிருந்து பழைய உதிரிபாகங்களை ஏற்றிக்கொண்டு மீண்டும் ஓசூரை நோக்கி நேற்றுமுன்தினம் இரவு  திரும்பி உள்ளார். அப்போது, காஞ்சிபுரத்தை அடுத்த  கீழம்பி சந்திப்பில் வாகனத்தை நிறுத்திவிட்டு டிரைவர் மஞ்சுநாதா டீ குடிக்கச் சென்றுள்ளார்.

அப்போது அங்கு திடீரென்று வந்த 3 பேர் கொண்ட கும்பல் இந்த மினி லாரியை கடத்திச் சென்றனர். மினிலாரியை மர்ம நபர்கள் எடுத்துச்  செல்வதைப் பார்த்த டிரைவர் மஞ்சுநாதா ஓடிவந்துள்ளார். கீழம்பியில் இருந்து தேசிய நெடுஞ்சாலை செல்லும் வழியில் சென்ற மினிலாரி வேகமாகச் சென்றுள்ளது. இதனைத் தொடர்ந்து டிரைவர் மஞ்சுநாதா, பாலுசெட்டிசத்திரம் காவல்  நிலையத்தில் புகார் செய்தார். எனவே, வழக்குப் பதிவு செய்த போலீசார் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ராணிப்பேட்டை சுங்கச்சாவடி மற்றும் ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடி சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.


Tags : company ,Kanchipuram , Minilari smuggling with goods worth Rs 10 lakh loaded to a private company: a commotion near Kanchipuram
× RELATED ஆவின் பால் பாக்கெட்டுகளில்...