×

ஜி.பி.எஸ்.கருவிகள் வாங்கியதில் ஊழல் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்: முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வலியுறுத்தல்

சென்னை: போக்குவரத்துத்துறையில் ஜி.பி.எஸ்.கருவிகள் வாங்கியதில் ஊழல் தொடர்பாக உடனடியாக விசாரணையை நடத்த வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வேண்டுகோள் விடுத்துள்ளார். முன்னாள் அமைச்சரும், திமுக முதன்மைச் செயலாளருமான கே.என்.நேரு எம்.எல்.ஏ., நேற்று வெளியிட்ட அறிக்கை: “தேசிய நெடுஞ்சாலையில் வேகக்கட்டுப்பாட்டுக் கருவிகள் குறித்த” டெண்டரில் 25 கோடி ரூபாய், 900 கோடி ரூபாயாக உயர்ந்து விட்டது என்று எங்கள் தலைவர் கூறியதற்கு என்ன ஆதாரம் என்று கேட்கிறார் அமைச்சர் விஜயபாஸ்கர். பாவம் அந்த கோப்புகள் எல்லாம் அவரிடம் இருக்கிறது.

எனவே, விஜயபாஸ்கருக்கு ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். எங்கள் தலைவர் எப்போதும் ஆதாரபூர்வமான ஊழல்களைத்தான் அறிக்கையாகக் கொடுக்கிறார். இன்னும் பல ஊழல் பட்டியல்கள் எங்கள் தலைவரிடம் அரசு அதிகாரிகள் கொடுத்து வைத்துள்ளார்கள். அவை சமயம் வரும் போது “சுனாமி” போல் அதிமுக அமைச்சர்களை வந்து தாக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இப்போது அவர் துறையில் இரு முறை உயர் நீதிமன்றம் ஒளிரும் பட்டை, ஜி.பி.எஸ். கருவி உள்ளிட்ட உத்தரவுகளுக்கு தடையுத்தரவும் வழங்கி விட்டது. என் துறையில் ஊழல் நடக்கவில்லை என்று இதற்குப் பிறகும் அமைச்சர் பல்லவி பாடி தன்னையும் ஏமாற்றி-மக்களையும் ஏமாற்றக் கூடாது.

தேசிய நெடுஞ்சாலைகளில் வேகக் கருவி அமைக்கும் டெண்டரிலும், ஒளிரும் பட்டை, ஜி.பி.எஸ் கருவி ஆகியவற்றை சில குறிப்பிட்ட தனியார் நிறுவனங்களிடம் மட்டுமே வாங்க வேண்டும் என்ற உத்தரவு போட்ட அரசு கோப்புகளை இன்றே லஞ்ச ஊழல் ஒழிப்புத் துறையிடம் ஒப்படையுங்கள். ஊழல் உண்டா இல்லையா என்பதை லஞ்ச ஊழல் ஒழிப்புத்துறையே விசாரிக்கட்டும்! அமைச்சர் விஜயபாஸ்கருக்கு திராணியும் தெம்பும் இருக்கிறதா? அமைச்சர் இந்த ஊழல் கோப்புகளைக் கொடுக்கிறாரோ இல்லையோ லஞ்ச ஒழிப்புத் துறையே சம்பந்தப்பட்ட கோப்புகளைக் கைப்பற்றி எங்கள் தலைவர் கேட்டது போல் உடனடியாக விசாரணையை நடத்திட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : KN Nehru , Former minister KN Nehru urges probe into corruption in GPS procurement
× RELATED தொடர்ந்து தமிழகத்திற்கு வரும்...