×

சாய்பாபா கோயிலில் உடை கட்டுப்பாடு விவகாரம் : ஷீரடிக்குள் நுழைய திருப்தி தேசாய்க்கு தடை

மும்பை, : சாய்பாபா கோயிலில் உடை கட்டுப்பாடு விவகாரத்தில் நாளை வரை ஷீரடி நகருக்குள் நுழைய தடை விதித்து சமூக ஆர்வலர் திருப்தி தேசாய்க்கு, நகர நிர்வாக மாஜிஸ்திரேட் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் ஷீரடியில் பிரசித்தி பெற்ற சாய்பாபா கோயில் அறக்கட்டளை நிர்வாகம் சமீபத்தில் வௌியிட்ட அறிவிப்பில், ‘பக்தர்கள் நாகரிக ஆடை அல்லது இந்திய பாரம்பரிய உடையணிந்து கோயிலுக்கு வரவேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்து கோயில் வளாகத்தில் பேனர் வைக்கப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு சமூக ஆர்வலரும், பிரபல வழக்கறிஞருமான திருப்தி தேசாய் கண்டனம் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில், ‘கோயிலில் வைக்கப்பட்ட அறிவிப்பு பலகையை அகற்றவில்லை என்றால், வருகிற 10ம் தேதி (நாளை) கோயிலுக்கு வந்து அதனை அகற்றுவேன். இந்த விவகாரத்தில் முதல்வர் உத்தவ் தாக்கரே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இவ்விவகாரம் பெரிதாக பேசப்பட்ட நிலையில், இதுகுறித்து கோயில் அறக்கட்டளை நிர்வாகி கன்குராஜ் பாகதே கூறுகையில், ‘உடை விவகாரம் குறித்து வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகை குறித்து பக்தர்களிடம் கருத்து கேட்கப்பட்டது.

அப்போது ஒருவர் கூட அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை’ என்றார். இந்நிலையில், நாளை திருப்தி தேசாய் கோயிலுக்கு வருவார் என்பதால், அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சட்டம் ஒழுங்கு நிலைமையை மேற்கோள் காட்டி, ஷீரடி நிர்வாக மாஜிஸ்திரேட் கோவிந்த் ஷிண்டே, திருப்தி தேசாய்க்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

சிஆர்பிசியின் 144வது பிரிவின் கீழ் அனுப்பிய நோட்டீசில், ‘அஹ்மத்நகர் மாவட்டத்தை ஒட்டியுள்ள ஷீரடி நகருக்குள் டிச. 8 நள்ளிரவு முதல் டிச. 11 நள்ளிரவு வரை நுழையக் கூடாது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாநில ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஹசன் முஷ்ரிஃப் கூறுகையில், ‘இது ஒரு கட்டாய உத்தரவு அல்ல; கோயில் நிர்வாகத்தின் விருப்பமான வேண்டுகோள். ஒவ்வொருவரும் தங்கள் விருப்பப்படி வாழ்வதற்கு உரிமை உண்டு என்று நாங்கள் நம்புகிறோம். கோயிலுக்கு பாரம்பரிய உடை அணிந்து வருவது நல்லது. கோயில் நிர்வாகத்தின் நடவடிக்கையை பாராட்டி பக்தர்கள் எங்களுக்கு கடிதங்கள் எழுதி உள்ளனர்’ என்றார்.

திருப்தி தேசாய் ஏற்கனவே சபரிமலை கோயில் விவகாரத்தில், தனது சகாக்களுடன் செல்ல முயற்சித்தார். அப்போது ஏற்பட்ட சட்ட ஒழுங்கு பிரச்னையால் பெரும் சர்ச்சை கிளம்பியது. தற்போது அவர் ஷீரடி கோயில் நிர்வாக வெளியிட்ட உடை அணிதல் விவகாரத்தில் இன்று ஷீரடிக்கு வரவுள்ளதாக கூறியதால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

Tags : Sai Baba Temple: Satisfaction Desai ,Shirdi , Sai Baba, Temple, Control, Shirdi, Tirupati Desai, Prohibition
× RELATED கடவுள் ராமர் அசைவம் சாப்பிடுபவர்...