×

திருக்குறுங்குடியில் சிறுத்தை புகுந்ததாக பீதி: உயர் அதிகாரி ஆய்வு

களக்காடு: நெல்லை மாவட்டம், திருக்குறுங்குடி அருகே படலையார்குளம் பகுதியில் வாழை, நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இங்கு அடிக்கடி வரும் காட்டு பன்றிகள், பயிர்களை நாசம் செய்து செல்கின்றன. இந்நிலையில் நேற்று அதிகாலை அப்பகுதியில் மண்ணில் விலங்கின் கால்தடம் பதிந்திருந்தது. இந்த கால்தடம் சிறுத்தையின் கால்தடமாக இருக்கலாம் என்பதால் விவசாயிகள் பீதிக்கு உள்ளாகினர்.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் பெரும்படையார் அளித்த தகவலை அடுத்து களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குநரும், வன உயிரின காப்பாளருமான அன்பு சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். மேலும் வனத்துறையினரும், வேட்டை தடுப்புக் காவலர்களும் அங்குள்ள புதர்களில் சிறுத்தை பதுங்கியுள்ளதா? என தீவிர சோதனை நடத்தினர்.

பின்னர் துணை இயக்குநர் அன்பு கூறுகையில், ‘‘கால்தடங்களை ஆய்வு செய்ததில் அது சிறுத்தை கால்தடங்கள் அல்ல என்பது தெரியவந்துள்ளது. இருப்பினும் தொடர்ந்து அப்பகுதியில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்படும். இரு தனிப்படை அமைக்கப்பட்டு, பகல் மற்றும் இரவு நேரங்களில் ரோந்து பணி தீவிரப்படுத்தப்படும். விவசாயிகள் அச்சப்படத் தேவையில்லை’’ என்றார்.

Tags : Leopard
× RELATED நாகர்கோவிலில் பஸ் நிலையங்கள், ரயில்...