×

ஆதிவாசி குடும்பத்தின் ரேஷன் கார்டு பழுது; மாற்று ஸ்மார்ட் கார்டு வழங்காமல் இழுத்தடிப்பு: 7 மாதமாக இலவச அரிசி பெறாததால் பாதிப்பு

கூடலூர்: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகேயுள்ள ஆதிவாசி குடும்பத்தின் ரேஷன் ஸ்மார்ட்  கார்டு பழுதடைந்ததால் 7 மாதமாக பொருட்கள் வழங்கவில்லை. இதனால்  அக்குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர். நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட தேவன் எஸ்டேட் பகுதியில் உள்ளது முறம்பிலாவு ஆதிவாசி குடியிருப்பு. இங்கு வசிப்பவர் ராஜன்(48). இவர் தனது தாயார் குள்ளி, மனைவி சாந்தி மற்றும் மூன்று மகன்களுடன் வசிக்கின்றார். கூலித் தொழிலாளி குடும்பமான இவர்கள் கடந்த 9 மாதத்திற்கு மேலாக கொரோனா காலகட்டத்தால் வேலையும், வருவாயும் இழந்துள்ளனர். குடும்பத்தை நடத்துவதற்கு ரேஷன் கடையில் பொருள் வாங்கி சமாளிக்கலாம் என்றால் இவர்களுக்கு கடந்த 7 மாதமாக ரேஷன்கடையில் பொருட்கள் வழங்குவதில்லை.

இது குறித்து ராஜன் குடும்பத்தினர் கூறியதாவது: கடந்த 7 மாதத்திற்கு முன்பு எங்களுக்கு பொருட்கள் வழங்கும் ரேஷன் கடைக்கு சென்றபோது, எங்களது ரேஷன் ஸ்மார்ட் கார்டு, ஸ்கேன் ஆகவில்லை. கார்டில் கோளாறு ஏற்பட்டுள்ளது. அதனால் பொருட்கள் வழங்க முடியாது. வேறு கார்டு வாங்கி வாருங்கள் என்று கூறினர். இதனால் நாங்கள் கூடலூர் வட்ட வழங்கல் அலுவலகத்தில் மாற்று கார்டு வழங்கும்படி கோரினோம். அங்கு மாதம் 2 முறை சென்றாலும், கடந்த 7 மாதமாக புதிய கார்டு வழங்காமல் இழுத்தடிக்கின்றனர். இதனால் ரேஷன் கடையில் பொருட்கள் பெற முடியவில்லை. ஏற்கனவே வேலை இழப்பிற்கு ஆளாகி சிரமப்பட்டு வருகிறோம். கார்டு பிரச்னையால் ரேஷன் கடையில் இலவச அரிசி கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளோம். தனியார் கடைகளில் பணம் கொடுத்து பொருட்கள் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சேதமடைந்த ஸ்மார் கார்டிற்கு மாற்றாக புதிய கார்டு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.’ இவ்வாறு ராஜன் குடும்பத்தினர் கூறினர்.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், கூடலூர் பகுதியில் ராஜனை போல் மேலும் பலரின் கார்டு தொலைந்துள்ளது. சிலருக்கு கார்டு பழுதடைந்துள்ளது. அவர்களுக்கு மாற்று கார்டு வழங்காமல் பல மாதங்களாக இழுத்தடித்து வருகின்றனர். ரேஷன் கடைகளில் சில ஊழியர்கள் கடை வியாபாரிகளுக்கெல்லாம் முறைகேடாக ரேஷன் அரிசி வழங்கி வருகிறார்கள். ஆனால் ரேஷன் அரிசியை நம்பி வாழ்ந்து வரும் ஆதிவாசி மக்களுக்கு, புதிய கார்டு வரும் வரை தார்மீக அடிப்படையில் வழங்குவதில்லை. ஆதிவாசி மக்களிடம் ரூல்ஸ் பேசுகிறார்கள். கூடலூர் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தல் அதிகரித்து வருகிறது. ஏழை மக்களின் வயிற்றில் அடித்து, அரிசி கடத்தலுக்கு துணை போகும் வட்ட வழங்கல் அலுவலகம் சார்ந்த ஊழியர்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Tags : Withdrawal , Ration card repair of a tribal family; Withdrawal without issuing an alternative smart card: Impact of not getting free rice for 7 months
× RELATED பாஜக தேசிய தலைவரான ஜெ.பி.நட்டா,...