×

முறையான பராமரிப்பில்லை: மதுரவாயல் - வாலாஜா இடையேயான 2 டோல்கேட்களில் 50% சுங்கக்கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும்: ஐகோர்ட்

சென்னை: சென்னை மதுரவாயல் - வாலாஜா சாலையில் சுங்கக்கட்டணத்தை 50 சதவீதமாக குறைத்து வசூலிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. சென்னை மதுரவாயல் - வாலாஜா வரையிலான தேசிய நெடுஞ்சாலை முறையாக பராமரிக்கப்படுவதில்லை என்ற கடிதத்தின் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கானது இன்று மீண்டும் நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அச்சமயம் மதுரவாயல் முதல் வாலாஜா வரை உள்ள நெடுஞ்சாலையின் நிலை தொடர்பான புகைப்பட ஆதாரங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த புகைப்படங்களை கண்ட நீதிபதிகள் கடும் அதிருப்தி தெரிவித்தனர்.  மதுரவாயல் - வாலாஜா இடையேயுள்ள சாலையில் பல இடங்களில் பள்ளங்கள் உள்ளதாகவும், விளக்குகள் எரியாத நிலையில் உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. சாலையின் நடுவே செடி வளர்க்காதது ஏன் எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் போடும் சாலைகள் அனைத்தும் இந்திய சாலை காங்கிரஸ் விதிகளுக்கு உட்பட்டதில்லை. பழுதடைந்த நிலையில் உள்ள மதுரவாயல் - வாலாஜா நெடுஞ்சாலையை பல நாட்களாக ஏன் சரி செய்யவில்லை என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதையடுத்து 10 நாட்களில் நெடுஞ்சாலை முறையாக பழுது பார்க்கப்படும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. இதனை பதிவுசெய்துகொண்ட நீதிபதிகள், 2 வாரங்களுக்கு மதுரவாயல் - வாலாஜா இடையே உள்ள 2 சுங்கச்சாவடிகளில் 50 சதவீத சுங்கக்கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். அதுமட்டுமின்றி சென்னை - பெங்களூரு நெடுஞ்சாலைகளில் ஆண்டுக்கு 520 விபத்துகள் நடக்கின்றன.

சாலை விபத்து வழக்குகளில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம், மாநில நெடுஞ்சாலை துறையை சேர்க்க வேண்டும் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். சமீபத்தில் நொளம்பூர் மழைநீர் கால்வாயில் விழுந்து உயிரிழந்த தாய் - மகளுக்கு தற்போது தமிழக அரசு 2 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளது என்று தெரிவித்த நீதிபதிகள், இந்த குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கியது தொடர்பாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையமும் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் 21ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.


Tags : iCourt , Maduravayal, Walaja, Tolkien, 50% Customs, iCourt
× RELATED வேட்புமனு நிராகரிப்பு வழக்கு: ஐகோர்ட் மறுப்பு