வியாபாரிகள் கிளவுஸ் அணிய வேண்டும் உணவுகளில் செயற்கை நிறம் சேர்த்தால் கடும் நடவடிக்கை: உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை

சென்னை: உணவுகளில் செயற்கை நிறங்களை சேர்த்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பாதுகாப்புத்துறை எச்சரித்துள்ளது. தமிழக அரசின் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் எழும்பூரில் சாலையோர உணவு வியாபாரிகளுக்கான உணவு பாதுகாப்பு பயிற்சி கூட்டம் நடந்தது. இதில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி என்.ராஜா தலைமையிலான குழுவினர் வாடிக்கையாளர்களுக்கு தரமான, சுகாதார உணவு வழங்குவது குறித்த அறிவுரைகளை வழங்கினர். மேலும், பணிபுரிவோர் தலையில் அணியும் உறை (கேப்), கையுறை அணிய வேண்டும், தள்ளுவண்டிகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை பயன்படுத்த வேண்டும், கடையை சுற்றி கழிவுநீர் தேங்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும், உணவுகளில் செயற்கை நிறமூட்டிகள் சேர்க்கக்கூடாது உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை வழங்கினர். இது குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ராஜா கூறுகையில், ‘உணவுப்பொருட்கள் பளிச்சென்று தெரிய வேண்டும் என்பதற்காக சில கடைக்காரர்கள் செயற்கை நிறங்களை பயன்படுத்துகிறார்கள். அது தவறு. இதை பார்க்கும் பொதுமக்கள் உடனடியாக எங்களுக்கு புகார் அளிக்கலாம். சம்பந்தப்பட்ட கடைகளில் ஆய்வு நடத்தி நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Related Stories:

>