×

தேர்தல் களத்தில் மட்டுமே வலம் வரும் வாக்குறுதி: எப்போது வரும் வாணியாறு கால்வாய் நீட்டிப்பு திட்டம்

பாப்பிரெட்டிப்பட்டி: வறட்சியில் இருந்து மக்களின் உழைப்பால் மெல்ல மீண்டு வரும் மாவட்டங்களில் முதன்மையானது தர்மபுரி. இந்த மாவட்டத்தில் விவசாயிகளுக்கான பல்வேறு திட்டங்கள் வெறும் அறிவிப்பாகவே உள்ளது. அந்த வகையில் முக்கியமானது வாணியாறு கால்வாய் நீட்டிப்பு திட்டம். இந்த கோரிக்கையை விவசாயிகள் முன்வைத்து அவர்களின் குரல் வறண்டு விட்டது. இப்படி முடக்கப்பட்டு அதிருப்தியில் ஆழ்ந்து போன, நூற்றுக்கணக்கான விவசாயிகளின் குரலாக வருகிறது நடப்பு வாரத்தில் வருகிறது இந்த பதிவு.

தர்மபுரி மாவட்டத்திலுள்ள பெரிய அணைகளில் ஒன்றாக இருப்பது வாணியாறு அணை. பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்திலுள்ள, சேர்வராயன் மலை அடிவாரத்தில் முள்ளிக்காடு கிராமத்தில் அமைந்துள்ளது வாணியாறு அணை. இந்த அணையின் மூலம் சுமார் 10,517 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மழைக் காலங்களில் இந்த அணையிலிருந்து ஏராளமான உபரி நீர் வெளியேறி வீணாவதால், அந்த நீரை இடதுபுறக் கால்வாய் வழியாக ராமியனஹள்ளி, கர்த்தானூர், தாதனூர், தா.புதூர், குருபரஹள்ளி, வகுத்தப்பட்டி, பாளையம், துறிஞ்சிப்பட்டி, சந்தப்பட்டி, கோபிசெட்டிப்பாளையம், சூரப்பட்டி, கொட்டாபுளியானூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு கொண்டு செல்லும் வகையில், இடதுபுறக் கால்வாயை நீட்டிக்க வேண்டும் என்றும், அதற்கான திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் அந்தப் பகுதி விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

ஒவ்வொரு தேர்தலிலும் இது அனைத்து அரசியல் கட்சிகளிடமும் தேர்தல் வாக்குறுதியாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறது. கடந்த 2016ம் ஆண்டு சட்டமன்றத் ேதர்தல் பிரசாரத்திற்கு தர்மபுரிக்கு வந்த அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, ‘‘வாணியாறு இடதுபுற கால்வாய்த் திட்டம் என்பது விவசாயிகளின் 25 ஆண்டுகால கோரிக்கை. வாணியாறு அணையிலிருந்து கால்வாய் மூலமாக தென்கரைக் கோட்டை, ராமயன ஹள்ளி, கர்த்தானூர், குருபர அள்ளி, தாதனூர், பசுவாபுரம், வகுத்துப்பட்டி ஆகிய ஊராட்சிகளில் 30க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கான பாசன வசதியை ஏற்படுத்தித் தரும் வகையில், வாணியாறு இடதுபுற கால்வாய்த் திட்டம். இந்தத் திட்டத்தை கண்டிப்பாக நிறைவேற்றுவோம்’’ என்றார்.

இதன் எதிரொலியாக ரூ.7 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், திட்ட மதிப்பீடு தயாரிக்கும் பணியை பொதுப்பணித் துறையினர் காலதாமதப்படுத்தி வருவதாக, விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். கடந்த நடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது கூட, இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி பல்வேறு ஊராட்சிகளை சேர்ந்த மக்கள் போராட்டம் நடத்தினர்.

மேலும் தேர்தலை புறக்கணிப்பு அறிவிப்பையும் வெளியிட்டனர். இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது, கடத்தூரில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கண்டிப்பாக வாணியாறு இடதுபுற பாசன கால்வாய் திட்டம் செயல்படுத்தப்படும் என்றார். ஆனாலும் இந்த திட்டம் இன்றுவரை கிணற்றில் போட்ட கல்லாகக் கிடக்கிறது. இதேபோல் வாணியாறு அணையிலிருந்து எருமியாம்பட்டி- புதுப்பட்டி வரையிலும், எலவடை- மொரப்பூர் வரையிலும் கால்வாய் அமைத்து தண்ணீர் கொண்டுவருவதாக கொடுத்த வாக்குறுதியும் ‘தோண்டப்படாத கால்வாய்’ ஆக மறைந்தே கிடக்கிறது. தற்போது இடதுகரை பாசனக்கால்வாய் வழித்தடங்கள் அனைத்தும் புதர்மண்டிக்கிடக்கிறது. தற்போது தொடரும் மழைக்காலத்திலும் லட்சக்கணக்கான லிட்டர், தண்ணீர் வீணாகிறது. இதை தடுக்கவும், முதல்வர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்போடு விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

இது குறித்து விவசாய சங்க நிர்வாகிகள் கூறுகையில், ‘‘வாணியாறு அணையின் உபரி நீரை பயன்படுத்த, 10 ஊராட்சிகளை சேர்ந்த மக்கள், பல ஆண்டுகளாக போராடி வருகிறோம். கடைசியாக ெபய்த மழையில் கூட தென்பெண்ணையாற்றில் மட்டும் 32டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலந்துள்ளது. தற்போது பெய்து வரும் மழை நீரும் லட்சக்கணக்கான லிட்டரில் வீணாகி வருகிறது. தர்மபுரி மாவட்டத்தில் 10 உபரி நீர் திட்டங்கள் உள்ளன. இதை நிறைவேற்ற மொத்தமாக ரூ.300 கோடி போதுமானது. போதுமான மழை பெய்தும், அதில் 80 சதவீதம் தண்ணீர் கடலில் கலக்கிறது. தர்மபுரி மாவட்டத்திலிருந்து 50ஆயிரம் பேர் பிழைப்பை தேடி, அண்டை மாநிலங்களில் கூலி வேலைக்கு செல்கின்றனர். தேவையான தண்ணீர் கிடைத்தால், விவசாயம் செய்து சொந்த ஊரில் வாழ முடியும். எனவே அரசு இதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

Tags : Papirettipatti
× RELATED முதல்வர் ஸ்டாலின் வருகையையொட்டி...