×

சுற்றுலா பயணிகளால் களைகட்டிய ஒகேனக்கல்: மீன் விற்பனை ஜோர்

பென்னாகரம்: விடுமுறை தினமான நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்ததால், ஒகேனக்கல் களைகட்டியது. இதையொட்டி, மீன் விற்பனை ஜோராக நடந்தது. புரெவி புயல் எதிரொலியாக, தொடர் மழை பெய்ததால், பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான ஒகேனக்கல்லுக்கு, கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகள் வருகை வெகுவாக சரிந்தது. இந்நிலையில், மழை நின்றதால் விடுமுறை தினமான நேற்று, ஒகேனக்கல் மீண்டும் களை கட்டியது. பெங்களூரு, ஆந்திரா, கேரளா மற்றும் தர்மபுரி, சேலத்தில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். மெயினருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்த அவர்கள், தொங்கு பாலம், மீன் காட்சியகம், முதலை பண்ணை மற்றும் கோத்திக்கல் பரிசல் துறையில் இருந்து, பரிசல் சவாரி மேற்கொண்டு காவிரியின் இயற்கை அழகை கண்டு ரசித்தனர்.

சுற்றுலா பயணிகள் வரவால், மசாஜ் தொழிலாளர்கள், சமையல் செய்பவர்கள், பரிசல் ஓட்டிகள், ஓட்டல் மற்றும் விடுதி உரிமையாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர். ஞாயிற்றுக்கிழமை என்பதால் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் மக்கள் பலர், மீன் மார்க்கெட்டில் போட்டி போட்டிக்கொண்டு மீன்களை வாங்கி சென்றனர். ராகு, கட்லா, ஆறா, ஜிலேபி, அவுரி உள்ளிட்ட மீன்கள் கிலோ ரூ.200 முதல் ரூ.400 வரை விற்பனை செய்யப்பட்டது. சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால், இன்ஸ்பெக்டர் தண்டபாணி தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.

Tags : Oyenakkal , Tourist, Hogenakkal
× RELATED பணி நேரத்தில் பெண் டாக்டர்,...