பூந்தமல்லி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்

திருவள்ளூர்: பூந்தமல்லி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் ஒன்றிய குழு தலைவர் பூவை எம்.ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் துணை தலைவர் பரமேஸ்வரி கந்தன், ஒன்றிய ஆணையர் ஜி.பாலசுப்பிரமணியம், வட்டார வளர்ச்சி அலுவலர்(கிராம ஊராட்சி) இ.தேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  கூட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் எம்.சத்யபிரியா முரளிகிருஷ்ணன், என்.பி.மாரிமுத்து, வி.கன்னியப்பன், பி.டில்லிகுமார், கே.சுரேஷ் குமார், உமா மகேஸ்வரி சங்கர், பிரியா செல்வம், பத்மாவதி கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் ஒன்றிய குழு உறுப்பினர் எம்.சத்யபிரியா முரளிகிருஷ்ணன் பேசியதாவது, “மேல்மணம்பேடு, கீழ்மணம்பேடு ஆகிய ஊராட்சிகளில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி கட்டிடங்கள் மற்றும் சமையல் கூடம் ஆகிய இடிந்து விழும் நிலையில் மிகவும் மோசமாக உள்ளது. ஆகவே புதிய கட்டிடங்களை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

மேலும், ஒன்றிய குழு உறுப்பினர் என்.பி.மாரிமுத்து பேசுகையில், “குத்தம்பாக்கம் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மழைநீர் கசிகிறது. ஜன்னல்கள் பழுதடைந்துள்ளன. சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என ஏற்கனவே கூறியிருந்தேன். அப்போது உடனே அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஆனால் கொரோனா தொற்று பரவல் காரணமாக இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ஒன்றிய குழு உறுப்பினர்களின் கோரிக்கைகளை அதிகாரிகள் ஆய்வு செய்து  உடனடியாக பணிகளை தொடங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். இதில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கோரிக்கைகள் அனைத்தும் உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஒன்றிய ஆணையர் ஜி.பாலசுப்பிரமணியம் தெரிவித்தார்.

Related Stories:

>