×

தரைப்பாலம் மூழ்கியதால் 25க்கும் மேற்பட்ட கிராமங்கள் துண்டிப்பு

விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே உள்ள மன்னம்பாடிக்கும், பெண்ணாடம் அருகே உள்ள எடையூருக்கும் இடையே உப்போடை அமைந்துள்ளது. இந்த உப்போடையில் கடந்த 100 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டுள்ள தரைப்பாலம் வழியாக விருத்தாசலம் தாலுகாவையும், திட்டக்குடி தாலுகாவையும் இணைக்கும் வகையில் உள்ள இந்த நெடுஞ்சாலையில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.

கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக இந்த ஓடையில் தண்ணீர் பெருக்கெடுத்து தரைப்பாலம் மூழ்கியது.
இதனால் எடையூர், கோவிலூர், சிறுமங்கலம், மதுரவல்லி மற்றும் மன்னம்பாடி, படுகளாநத்தம், விளாங்காட்டூர் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பெண்ணாடம் மற்றும் விருத்தாசலம் பகுதிகளுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

தரைப்பாலம் மூழ்கியதால், பொதுமக்கள் கண்டபங்குறிச்சி வழியாக சுமார் 25 கிலோ மீட்டர் சுற்றி விருத்தாசலம், பெண்ணாடம், வேப்பூர் பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இந்த தரை பாலத்தை அகற்றிவிட்டு மேம்பாலம் அமைக்க பல வருடங்களாக பொதுமக்கள் போராடியும், புகார் மனு அளித்தும் அரசுக்கு தெரிவித்து வருகின்றனர்.

இந்த முறை இதற்கு சரியான தீர்வு இல்லை என்றால் மிகப்பெரிய அளவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அப்பகுதி மக்கள் எச்சரித்துள்ளனர்.

Tags : villages ,ground bridge , Vriddhachalam: Uppodai between Mannambadi near Vriddhachalam and Edayur near Pennadam
× RELATED குடிநீர், சாலை வசதி இல்லை எனக்கூறி தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள்