×

தொடர்ந்து 3வது முறையாக கடன் வட்டி விகிதம் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

மும்பை: குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் ரிசர்வ் வங்கி எந்த மாற்றமும் செய்யவில்லை. இதனால், வீடு, வாகன கடன்களுக்கான இஎம்ஐ குறைய வாய்ப்பில்லை. நடப்பு நிதியாண்டின் நாட்டின் பொருளாதார சரிவு 7.5  சதவீதமாக இருக்கும் என ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.  ரிசர்வ் வங்கி 2 மாதங்களுக்கு ஒரு முறை நிதிக்கொள்கை மறு சீராய்வு அறிக்கையை வெளியிடுகிறது. இதில், வட்டி விகிதம் நிர்ணயம் உட்பட பல்வேறு கொள்கை முடிவுகள்  எடுக்கப்பட்டு வருகின்றன. 6 உறுப்பினர்கள் கொண்ட இந்த கூட்டம், ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் தலைமையில் நடந்தது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இதில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:  நிதிக்கொள்கை கூட்டத்தில் குறுகிய கால கடன் வட்டியில் எந்த மாற்றமும் செய்ய வேண்டாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி 4 சதவீதமாக நீடிக்கிறது. தொடர்ந்து 3வது முறையாக  இதில் எந்த மாறறமும் செய்யப்படவில்லை.

இதுபோல், ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 3.35 சதவீதம் என்ற அளவிலேயே தொடரும். எனவே, இதன் காரணமாக வங்கிகளுக்கான வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இருக்காது. இஎம்ஐ வட்டிகள் குறைய வாய்ப்புகள் இல்லை.  இந்திய பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் 9.5 சதவீதம் சரியும் என கடந்த அக்டோபர் மாதம் கணிக்கப்பட்டது. தற்போதைய சூழ்நிலைகளின்படி, இந்த சரிவு நடப்பு நிதியாண்டில் 7.5 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு  நிதியாண்டின் 3ம் காலாண்டின் பொருளாதாரம் 0.1 சதவீதமும், 4ம் காலாண்டில் 0.7 சதவீதமும் வளர்ச்சியடைய வாய்ப்புகள் உள்ளன.  சில்லறை விலை பண வீக்கம் 3ம் காலாண்டில் 6.8 சதவீதமாகவும், 4ம் காலாண்டில் 58 சதவீதமாகவும்  இருக்கும். ஊக்க சலுகை திட்டங்கள் காரணமாக நுகர்வு மற்றும் பணப்புழக்கம் அதிகரித்து, பொருளாதார வளர்ச்சிக்கு  ஆதரவாக இருக்கும். வளர்ச்சிக்கு உந்து சக்தியாக மூலதனங்கள் மேற்கொள்ளப்படும்.தனியார் முதலீடுகள் இன்னும்  குறைவாகவே உள்ளன.

சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு ஏற்ப மேலும் பல நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதுபோல், முறைகேட்டால் பாதிக்கப்பட்ட மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி (பிஎம்சி) சீரமைப்பு  நடவடிக்கைகளில் முன்னேற்றம் காணப்பட்டு வருவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துளளது. கொரோனா பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால், கடந்த ஏப்ரல் ஜூன் காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் -23.9 சதவீதம் ஆக சரிந்தது.  இதன்பிறகு பொருளாதாரம் சற்று மீண்டு வருவதாக கூறப்பட்டாலும், தொழில்துறைகள் முழுமையாக மீள்வதற்கு இன்னும் ஓராண்டு வரை கூட ஆகலாம் என நிபுணர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

24 மணி நேரமும் ஆர்டிஜிஎஸ் பரிவர்த்தனை
உயர் மதிப்பிலான வங்கி பரிவர்த்தனைகள் ஆர்டிஜிஎஸ் முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த முறையில் தற்போது வங்கி வேலை நாட்களில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டும் அனுப்பலாம். இன்னும் சில  நாட்களில், வாரத்தின் 7 நாட்களும் 24 மணி நேரமும் ஆர்டிஜிஎஸ் முறையில் பண பரிவர்த்தனை செய்யும் நடைமுறை வர உள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.  என்இஎப்டியில் எல்லா நேரமும் பணம் அனுப்ப தற்போது வசதி உள்ளது.  ஆனால் இதன்மூலம் அதிகபட்சமாக ₹2 லட்சம் வரை மட்டுமே அனுப்ப முடியும்.

‘டிவிடெண்ட் அனுப்ப வேண்டாம்’
கொரோனா பாதிப்பால் வங்கிகளின் நிதி நிலை மோசமாக உள்ளது. இதை கருத்தில் கொண்டு வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் கடந்த மார்ச் மாதத்துடன் முடிந்த 2019-20 நிதியாண்டுக்கான டிவிடெண்ட் தொகை எதையும் வழங்க  வேண்டாம். மூலதனத்தை பாதுகாக்கவும், இழப்பை ஈடுகட்டவும், லாபத்தை தக்க வைக்கவும், செப்டம்பர் காலாண்டில் வங்கிகளின் நிதிநிலை அறிக்கையை ஆய்வு செய்த பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

கான்டாக்ட்லெஸ் கார்டு பரிவர்த்தனை வரம்பு 5,000 ஆக உயர்வு
வங்கிகள் கான்டாக்ட்லெஸ் கார்டுகள் எனப்படும் கார்டுகளை வழங்கி வருகின்றன. பாயின்ட் ஆப் சேல் கருவியில் உரசாமலேயே, அந்த கருவி அருகில் காட்டுவதன் மூலம் பரிவர்த்தனை செய்யலாம். இதற்கான உச்சவரம்பு தற்போது ₹2,000  ஆக உள்ளது. இதை தற்போது 5,000 ஆக உயர்த்தி ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

Tags : announcement ,RBI , Lending interest rate unchanged for 3rd consecutive time: RBI announcement
× RELATED ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை ஒருவழிப்பாதையாக மாற்றம்..!!