ஓபிசி வகுப்பினருக்கு வருமான உச்ச வரம்பை ரூ.25 லட்சமாக உயர்த்த வேண்டும்: மத்திய அமைச்சருக்கு டி.ஆர்.பாலு, எம்.பி. கடிதம்

சென்னை: இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கானவருமான உச்ச வரம்பை ரூ.25 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் தாவர்சந்த் கெஹலோட்டுக்கு திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி. எழுதிய கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுரைப்படி கழகப் பொருளாளரும் கழக நாடாளுமன்ற குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு, எம்.பி எழுதியுள்ள கடிதம்: “கிரீமி லேயர்” எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பில் முன்னேறியவர்களை கண்டறியும் வகையில் வருமான உச்ச வரம்பினை நிர்ணயம் செய்வது பற்றி மத்திய அரசு அமைத்திட்ட வல்லுநர் குழு 1993ம் ஆண்டு அளித்த அறிக்கையின்படி குறைந்தபட்சம் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த வருமான உச்சவரம்பை மத்திய அரசு மாற்றி அமைத்திட வேண்டும். ஆனால், இதனை அரசு பின்பற்றவில்லை. 1993க்குப் பிறகு, குறைந்தபட்சம் 9 முறையாவது இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கான வருமான உச்சவரம்பை உயர்த்தி இருக்க வேண்டும்.

1993ல் ரூ.1 லட்சமாக இருந்த வருமான உச்சவரம்பு 9.3.2004ல் ரூ.2.5லட்சமாகவும், 14.10.2008ல் ரூ.4.5 லட்சமாகவும், 16.5.2013ல் ரூ.6 லட்சமாகவும், அதன்பின்னர் 1.9.2017ல் ரூ.8 லட்சமாகவும், என நான்கு முறை மட்டுமே மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. 3 ஆண்டுக்கு ஒரு முறையாவது இந்த வரம்புத் தொகை உயர்த்த வேண்டும் என்பதை 1993ம் ஆண்டே மத்திய அரசு ஏற்றுக் கொண்ட போதிலும் அதனை செயல்படுத்தவில்லை என்பதோடு அரசு தனது கொள்கைக்கு முரணாக பல ஆண்டுகள் தாமதத்துக்குப் பின் இந்த வருமான உச்சவரம்பை மாற்றி அமைப்பது கண்டிக்கத்தக்கது.

எனவே, இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, தற்போதைய பொருளாதார நிலைமை, விலைவாசிகள், பணவீக்கம் போன்றவற்றையும் கணக்கில் கொண்டு வருமான உச்சவரம்பை ரூபாய் 25லட்சமாக உயர்த்தவும், இது தொடர்பான இக்கடிதத்தில் எடுத்து வைக்கப்பட்டுள்ள ஏனைய கோரிக்கைகள் மீதும் முன்னுரிமை அளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்போது தான் தற்போது 16சதவீதம் அளவில் மட்டுமே உள்ள இட ஒதுக்கீடு பெற்றுள்ள நிலை மாறி அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள 27சதவீதம் ஒதுக்கீட்டை பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த மக்கள் முழுஅளவில் பெற்று பயனடைய முடியும். இவ்வாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories:

>