×

தமிழ்நாட்டை வஞ்சித்துவிட்டு பொய்களால் மறைக்க முயற்சிக்கலாமா? டி.ஆர்.பாலு எம்.பி. பிரதமருக்கு கேள்வி

சென்னை: தமிழ்நாட்டை வஞ்சித்துவிட்டுப் பொய்களால் மறைக்க முயற்சிக்கலாமா என திமுக பொருளாளரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு பிரதமருக்கு கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: அரசுமுறைப் பயணமாகத் தமிழ்நாட்டுக்கு வந்து, அரசியல் பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு, தாம் பிரதமர் என்பதையே மறந்து, அரசியல் அவதூறுகளை அள்ளி இறைத்துவிட்டுப் போயிருக்கிறார் பிரதமர் நரேந்திரமோடி. அவரது சாதனையைத் தமிழ்நாட்டில் தி.மு.க மறைக்கிறதாம். இப்படி புலம்பி இருக்கிறார் பிரதமர். அவர் எந்தப் பகுதியில் பேசினாரோ அந்தப் பகுதியின் தொழில் வளத்தையே சிதைத்தது ஒன்றிய பா.ஜ. அரசுதான்.

பின்னலாடை வர்த்தகச் சந்தைக்கான வாசலை வங்கதேசத்துக்குத் திறந்துவிட்டு, திருப்பூரை வஞ்சித்த மோடி, கொங்கு மண்ணின் பெருமையை எப்படிப் பேச முடிகிறது? காங்கிரஸ் கூட்டணியில் திமுக அங்கம் வகித்தபோது தமிழ்நாட்டிற்கு ஒன்றும் செய்யவில்லை எனப் பேசியிருக்கிறார் மோடி. தமிழ் செம்மொழி பிரகடனம், மிகப் பெரிய போக்குவரத்து மேம்பாலங்கள், 50 காசு செலவில் இந்தியா முழுவதும் தொலைபேசியில் பேசும் வசதி என ஒன்பதாண்டு காலத்தில் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இந்தியா முழுமைக்கும் பல திட்டங்களைத் திமுக கொண்டு வந்தது.

இத்தகைய சிறப்புத் திட்டம் ஏதாவது தமிழ்நாட்டுக்கு பா.ஜ.க அரசு கொண்டு வந்ததாகப் பட்டியல் போட முடியுமா? என்னுடைய சாதனைகளை அச்சிடவிடாமல் நாளிதழ்களைத் தமிழ்நாட்டில் உள்ள தி.மு.க அரசு தடுக்கிறது. மக்களிடம் சென்று அடையாமல் தொலைக்காட்சிகளையும் தமிழ்நாடு அரசு கட்டுப்படுத்துகிறது’ எனப் பேசியிருக்கிறார். பிரதமர் மோடி. காலை, மாலை பேப்பர்களைப் படிக்கக்கூட உங்களுக்கு நேரமில்லையா பிரதமரே. அந்த தினசரிகளைக் கொஞ்சம் புரட்டி பாருங்கள். எல்லாத் தலைப்பு செய்திகளிலும் நீக்கமற நீங்கள் தான் நிரம்பியிருக்கிறீர்கள். நேரலை, விவாதங்கள், விறுவிறு செய்திகள், சிறப்புச் செய்திகள் எனத் தொலைக்காட்சிகள் முழுவதும் மோடி பற்றிய செய்திகளைத்தான் இரண்டு நாளும் வாசித்தன.

ஒன்றிய அரசுக்கு ஒத்துழைப்பு தராத ஆட்சி தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது’ எனப் பொய்யைச் சொல்லியிருக்கிறார்.எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க இடம் கொடுத்தது தமிழ்நாடு அரசுதான். அமைக்காமல் ஏமாற்றியது யார்? மெட்ரோ இரண்டாம் கட்டப் பணிகளுக்கு அனுமதி கொடுக்காமலும், நிதி கொடுக்காமலும் ஏமாற்றுவது யார்? திமுக ஒன்றிய அரசில் அங்கம் வகித்த போது சென்னை துறைமுகம் – மதுரவாயல் இடையே பறக்கும் சாலைத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகு அந்தத் திட்டத்தை முடக்கினார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு அமைந்த பிறகு அந்தத் திட்டத்தை நிறைவேற்ற முயற்சிகள் எடுத்துப் பணிகள் இப்போது நடந்து வருகின்றன. தமிழ்நாட்டை இப்படி வஞ்சித்துவிட்டு பொய்களால் மறைக்க முயற்சிக்கலாமா. தி.மு.க.வை இனிப் பார்க்க முடியாதுஎனச் சொல்லியிருக்கிறார். திமுக அழிந்து போகும். தலைதூக்காது என திமுக உருவான 1949ம் ஆண்டில் இருந்து இன்று வரை 74 ஆண்டு காலமாகப் பலர் பேசிக் கடந்து சென்று கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், திமுக என்ற இமயமலை இன்றும் வரலாற்றில் நிமிர்ந்து நின்று கொண்டுதான் இருக்கிறது. தி.மு.க.வையே இல்லாமல் ஆக்கிவிடுவோம் என சவால் விட்டவர்கள் எல்லாம் வரலாற்றில் காணாமல் போய்விட்டார்கள். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post தமிழ்நாட்டை வஞ்சித்துவிட்டு பொய்களால் மறைக்க முயற்சிக்கலாமா? டி.ஆர்.பாலு எம்.பி. பிரதமருக்கு கேள்வி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,DR ,Balu ,Chennai ,DMK ,Treasurer ,Parliamentary Committee Leader ,TR Palu ,
× RELATED திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து...