×

கவிதை மூலம் சாதியம் பேசுவோரை கண்டித்த தாசர்: இன்று கனகதாசர் ஜெயந்தி

மனிதன் கால் படாத நிலமல்ல.../ அடுப்பில் சமைக்காத உணவல்ல.../ மனிதனை அறியாத இறைவில்லை.../இதில் கீழ் என்ன....மேல் என்ன? சாதி சாதி என்று பேசும் மானிடா... நீ பிறந்த சாதி உனக்கு தெரியுமா.....? என்று கடந்த 15ம் நூற்றாண்டில் குரல் எழுப்பி சமூக நீதியை நிலை நாட்டிய கனகதாசரின் 524வது ஜெயந்தி விழா இன்று. கடந்த 1508-1606ம் ஆண்டுகளில் தார்வார் மாவட்டம் பாட என்ற கிராமத்தில் பீரேகவுடா-பச்சம்மா தம்பதியரின் மகனாக பிறந்தவர் திம்மண்ணாநாயக். அந்த காலத்தில் படிப்பிலும், ஆன்மிக நெறியிலும் சிறந்து விளங்கிய திம்மண்ணா, ஆதிபகவான் ஸ்ரீமத் நாராயணன் மீது அதிகம் பக்தி கொண்டிருந்தார். அவரின் நாவில் எப்போதும் ஆதிகேசவனின் துதி மட்டுமே ஒலித்து கொண்டிருந்தது.

தனது குருநாதரான வியாசராஜதீர்த்தர், அவரை பார்க்கும் போதெல்லாம் திம்மண்ணா என்று அழைக்காமல் கனக என்று (பகவான் கிருஷ்ணனின் இன்னொரு பெயர்) அழைப்பார். கனக என்றால் தங்கம் என்று பொருள். திம்மண்ணாவிடம் தங்கமான குணமும், அகங்காரமில்லாத மனமும், பிறருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணமும் இருந்தது. தான் போற்றி வணங்கிய கிருஷ்ண பரமாத்மாவின் பெயரை தான் சூட்டிகொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் கிருஷ்ணனின் தாசன் என்பதை சொல்லி மகிழ்வதற்காக கனகதாசர் என்று மாறிவிட்டார். பத்து தலைமுறை அமர்ந்து சாப்பிடும் வகையில் செல்வ, செழிப்பு இருந்தும், அவை அனைத்தும் துறந்து கையில் தாளம்-தம்புரியை மட்டுமே தனது சொத்தாக கையில் எடுத்து கொண்டு ஊர் ஊராக சென்று கண்ணணின் மகிமையை போற்றி பாடினார்.

* சமூகநீதி போதித்த மகான்:-
கனகதாசர் வாழ்ந்த காலத்தில் மக்களிடம் தீண்டாமை தலைவிரித்து ஆடிக்கொண்டிருந்தது. மேல், கீழ் என்று மக்கள் பிரித்து பார்த்து வாழ்ந்து வந்தனர். அதை பார்த்து வெகுண்டேழுந்த தாசர். தனது வசன பாடல் மூலம் ‘‘தண்ணீர் இந்த உலகின் ஜீவன்களுக்கு தாயாகவுள்ளது. அது எந்த சாதி என்று சொல்ல முடியுமா?’’ என்று கேள்வி எழுப்பினார். மேலும் சமூகத்தில் கீழ்-மேல் என்ற தீண்டாமையை அவர் ஏற்றுகொண்டதில்லை. அதை வெளிபடுத்தும் வகையில் ‘ஒரே மண்ணில் பிறந்து, ஒரே உணவை உண்டு, ஒரே காற்று, ஒரே நீர், ஒரே கடவுளின் நிழலில் வாழும் மனிதரில் மேல், கீழ் என்று சொல்வதில் அர்த்தமென்ன’’ என்று தனது வசன கவிதை மூலம் சாதியம் பேசுவோரை கண்டித்த தாசர்.

சாதி, சாதி என்று கூறி உங்களை தாழ்த்தி கொள்ளாதீர்கள் என்று தனது சமூகநீதி கருத்தை பிரதிபலித்துள்ளார். கனகதாசர் தனது இளம்வயதில் எந்த கவிஞனும் செய்யாத சாதனையை படைத்துள்ளார். சுவேனந்தரே நளசரித்ரா, ஹரிபக்திசார, நைசிம்ஹாஸ்தவ, மோகனதரங்கிணி, ராமதான்யா ஆகிய பஞ்ச காவியங்கள் படைத்தார். அவை அனைத்தும் பகவான் கிருஷ்ணரை போற்றி பாடிய பாடல்களாகவும், விஷ்ணுவின் பத்து அவதாரங்களை எளிமையாக எடுத்து கூறும் வகையில் உள்ளது.


Tags : Dasar ,speakers ,Satyam ,Kanagadasar Jayanti , Dasar condemns Satyam speakers through poetry: Today is Kanagadasar Jayanti
× RELATED திமுக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் நடிகர் கமல்ஹாசன், கருணாஸ் பெயர்