×

செய்தி துளிகள்

ஜேபி.நட்டா பிறந்தநாள் மோடி, அமித் ஷா வாழ்த்து
புதுடெல்லி: பாஜ தேசிய தலைவர் ஜேபி. நட்டா நேற்று அவரது 60வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட டிவிட்டரில், `நல்ல உடல் நலத்துடன் நீண்ட நாள் வாழ வேண்டும்,  என்று கூறியுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விடுத்த வாழ்த்து செய்தியில், அவரது வலிமையான தலைமையின் கீழ் பாஜ வெற்றி நடை போடுகிறது, என தெரிவித்துள்ளார். பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ``பாஜ  தலைவர் நட்டா கடின உழைப்பாளி, அனைவரையும் ஒருங்கிணைப்பதில் வல்லவர். நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் கட்சியை வளர்க்க வேண்டும் என்பதில் ஆர்வமுள்ளவர். அவர் நீண்ட நாள், உடல் நலத்துடன் வாழ  பிரார்த்திக்கிறேன், என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

`மோடி நண்பர்களின்  வருவாய் உயர்ந்துள்ளது
புதுடெல்லி: வேளாண் சட்டங்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடைபெறும் நிலையில், ராகுல் காந்தி தனது டிவிட்டரில், ``விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாகும் என்று மத்திய அரசு கூறுகிறது. ஆனால்  விவசாயிகளின் வருமானம் பாதியாக குறைந்துள்ளது. அதே நேரம், பிரதமர் மோடியினுடைய நண்பர்களின் வருவாய் 4 மடங்கு உயர்ந்துள்ளது. கோட்-சூட் போட்ட இந்த அரசானது பொய், கொள்ளைகளால் நிறைந்துள்ளது, என்று கூறியுள்ளார்.

ஒற்றுமை சிலை வசூலில் 5.25 கோடி முறைகேடு
கெவடியா: குஜராத் மாநிலம் கெவடியாவில் அமைந்துள்ள சர்தார் வல்லபாய் படேலின் ஒற்றுமை சிலையை காண வரும் சுற்றுலா பயணிகளிடம் இருந்து பார்வையிடுதல், பார்க்கிங் கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது. இத்தொகை வங்கி  கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், தினசரி ரொக்க வசூல் ரூ 5.25 கோடியை `ஸ்டாபர்ஸ் ஆப் ரைடர் பிசினஸ் சர்வீசஸ் என்ற தனியார் நிறுவன ஊழியர்கள் 2018ம் ஆண்டு அக்டோபர் முதல் 2020 மார்ச் வரை கையாடல்  செய்ததாக வங்கி நிர்வாக தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள மாவட்ட நிர்வாகம், வங்கி, நிறுவன அதிகாரிகள் கொண்ட குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் அடுத்தக் கட்ட  நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

யோகி மிஷன் சக்தி திட்டம் தோல்வி
புதுடெல்லி: உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் `மிஷன் சக்தி திட்டம் தோல்வியடைந்து விட்டதாக பிரியங்கா காந்தி தெரிவித்தார். `பெண்களுக்கு எதிராக குற்றம் செய்வோரை கடுமையாக தண்டிக்கும் மிஷன் சக்தி திட்டம்  கடந்த அக்டோபரில் உபி.யில் செயல்படுத்தப்பட்டது. ஆனால் இத்திட்டம் அரசின் போலித்தனம், தவறான பிரசாரமாக மட்டுமே உள்ளது. பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை மூடி மறைக்கவே இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.  ஒரு பெண் எரித்து கொல்லப்பட்ட ஒரு மாதத்திற்கு பின்னரே வழக்குபதியப்படுகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருகி வருகிறது. இதனால் இத்திட்டம் தோல்வி அடைந்துள்ளது, என்று அவர் டிவிட்டரில் கூறியுள்ளார்.

சுஷில் மோடி வேட்புமனு தாக்கல்
பாட்னா: பாஜ கூட்டணியில் அங்கம் வகிக்கும், லோக் ஜனசக்தியின் தலைவர் ராம் விலாஸ் பஸ்வான் மறைவுக்கு பின்னர், பீகார் மாநிலத்தில் மாநிலங்களவை இடம் காலியாக உள்ளது. இந்த இடம் மீண்டும் எல்ஜேபி.க்கு வழங்கப்படுமா?  பாஜ.வில் முக்கிய தலைவர்களில் யாருக்காவது அளிக்கப்படுமா? என பல ஊகங்கள் நிலவிய வந்த நிலையில், பீகார் முன்னாள் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி போட்டியிடுவார் என்று பாஜ தலைமை கடந்த வாரம் அறிவித்தது.  இதையடுத்து, அவர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். வரும் 7ம் தேதி வேட்புமனுவை திரும்ப பெறவும், வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 14ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியான மெகா  கூட்டணி சார்பில் யாரும் போட்டியிடததால், சுஷில் மோடி போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.

லாரி-கார் மோதி  ஒரே குடும்பத்தில் 6 பேர் பலி
திருமலை: தெலங்கானா மாநிலம், ஐதராபாத் தாட்பன் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் கர்நாடகா மாநிலம், குர்மித்கலில் உள்ள உறவினர் வீட்டிற்கு காரில் சென்று விட்டு நேற்று ஐதராபாத்திற்கு திரும்பியுள்ளனர். ஐதராபாத்-  பிஜாப்பூர் நெடுஞ்சாலை செவெல்லா மண்டலம், மல்காபூர் கேட் அருகே வந்தபோது, எதிரே வந்த போர்வெல் லாரி, கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆசிப்கான்(50), நாசியாபேகம்(45), சானியா(18), அர்ஷா(28),  நாசியாபானு(36) மற்றும் 6வயது சிறுமி ஆகிய 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 5 பேர் படுகாயமடைந்தனர்.

Tags : Happy Birthday JP Natta Modi, Amit Shah
× RELATED 2025-26ம் ஆண்டில் இருந்து சிபிஎஸ்இயில்...