×

அதிரடி சலுகை விலையால் அதிகமாக விற்பனையாகும் டிவி, ஹோம் தியேட்டர்கள் தள்ளாடும் சினிமா

அதிரடி சலுகை விலையில் டிவி, ஹோம் தியேட்டர்கள் கிடைப்பதால் மக்கள் அதை வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் சினிமா, தள்ளாடும் நிலைக்கு சென்றுள்ளது. பண்டிகை காலங்களில் டிவி, ஹோம் தியேட்டர்கள் சலுகை  விலைகளில் கிடைக்க துவங்கியுள்ளது. பெரிய அளவிலான 55, 65, 75 இன்ச் டிவிக்கள் ₹1 லட்சத்துக்குள் கிடைக்கிறது. இதனால் நடுத்தர வர்க்கத்தினரும் இதை வாங்க போட்டி போடுகின்றனர். டிவிக்களின் விலை குறைத்து சலுகை விலையில்  தருவதை பார்த்து சவுண்ட் எஃபெக்ட் சாதனங்களையும் பல்வேறு நிறுவனங்கள் அதிரடியாக விலையை குறைத்து விற்கின்றன. இதனால்  6 ஆயிரம் முதல் ₹10 ஆயிரத்துக்குள் ஹோம் தியேட்டர்கள் கிடைத்துவிடுகிறது. ஹெச்டி, 4 கே  தரத்துடன், தியேட்டரில் அமர்ந்து படம் பார்க்கும் அனுபவத்தை இவை தருவதால் வீட்டில் இருந்தபடியே சினிமாவை ரசிக்கும் அனுபவம் மக்களுக்கு கிடைக்கிறது.

இத்துடன் ஓடிடியில் பல புதிய படங்கள், விறுவிறுப்பான வெப்சீரிஸ்கள் வெளியிடப்படுவதால் அதற்கும் மவுசு கூடியுள்ளது. 10க்கும் அதிகமான ஓடிடி நிறுவனங்கள் உள்ளன. அதுவும் மிக சொற்ப விலையில் வெறும் 400க்கு ஆண்டு சந்தா  செலுத்தினால் வருடம் முழுக்க படம் பார்க்கும் வசதியை தருகிறது. இதனால் மொபைல் போனில் ஓடிடியில் வெளியிடப்படும் படத்தை, ஹோம் தியேட்டரில் பார்க்கும் வகையில் பொருத்தி பார்க்கின்றனர். இதனால் புதிய படங்கள்  பலவற்றையும் இதுபோல் மக்கள் பார்த்து ரசிக்க துவங்கிவிட்டனர். கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகை கால சலுகையாக டிவி, ஹோம் தியேட்டர் சாதனங்களை குறைந்த விலைக்கு தரும் திட்டத்தில் சீன நிறுவனங்களும் போட்டி  போடுகின்றன. குறைந்த விலைக்கே இந்த சாதனங்கள் கிடைப்பதால் மக்களும் இதை விரும்பி அதிக அளவில் வாங்குகின்றனர்.

சமீபத்தில் மும்பையிலுள்ள தனியார் நிறுவனம் நடத்திய தேசிய அளவிலான கணக்கெடுப்பில் பெரிய திரை டிவி மற்றும் ஹோம் தியேட்டர் வாங்குவோரின் எண்ணிக்கை கடந்த ஓராண்டில் 40லிருந்து 65 சதவீதமாக உயர்ந்துள்ளது என  தெரிவிக்கப்பட்டுள்ளது.  இப்போது பெரும்பாலான தியேட்டர்கள் பெரிய ஷாப்பிங் மால்களில்தான் இயங்குகின்றன. இங்கு தியேட்டருக்கு ஒரு குடும்பம் படம் பார்க்க சென்றால் ₹3 ஆயிரம் வரை செலவாகிவிடுகிறது. இதையெல்லாம் தவிர்க்கும்  விதமாக வீட்டிலேயே ஹோம் தியேட்டர்களை அமைத்து படம் பார்க்கும் பழக்கம், மக்களிடம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. மேலும் மொபைல் போனில் ஓடிடி மூலம் படம் பார்ப்பதால் பயணத்தில் செல்லும்போது, வீட்டில் ஓய்வு நேரத்தில்,  ஓட்டல்களுக்கு செல்லும்போது, அலுவலகங்களில் என பல இடங்களிலும் நினைத்த நேரத்தில் குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டும் குறிப்பிட்ட அளவு படம் பார்த்துவிட்டு, பிறகும் தொடர்ந்து பார்க்கும்படி வசதியை ஏற்படுத்திக் கொள்கிறார்கள்.

இதுபோன்ற வசதி தியேட்டரில் படம் பார்க்கும்போது கிடைப்பதில்லை என்றும் மக்கள் கூறுகின்றனர். தற்போது கொரோனா நோய் பாதிப்பின் தாக்கமும் இருப்பதால் மக்கள் வெளியில் செல்ல பயப்படுகின்றனர். இதனால் தியேட்டர்களுக்கு  குடும்பத்தினர் மட்டுமின்றி இளைஞர்களும் இப்போது செல்வதில்லை. இதனால் தமிழகத்தில் 60க்கும் மேற்பட்ட தியேட்டர்களை மீண்டும் மூடிவிட்டனர். வீட்டில் இருந்தபடி சினிமா பார்க்கும் டிரெண்ட் தமிழகத்தில் வந்துவிட்டது. இதனால்  தியேட்டர்கள் வெறிச்சோடி கிடக்கின்றன. சினிமா தள்ளாடும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இனி புதிய தொழில்நுட்பம் மூலம்தான் தங்களது பொழுதுபோக்கை நிர்ணயித்துக்கொள்ளும் நிலையில் மக்கள் உள்ளனர். இதனால் திரையுலகம்  பெரும் பின்னடைவை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.



Tags : home theater , The best-selling TV, home theater rocking cinema with action offer price
× RELATED அதிரடி சலுகை விலையால் அதிகமாக...