×

கவுசிக ஏகாதசியையொட்டி ஆண்டாளுக்கு 108 பட்டுப்புடவை: திருவில்லிபுத்தூரில் விடிய விடிய நடந்தது

திருவில்லிபுத்தூர்: கவுசிக ஏகாதசியை முன்னிட்டு திருவில்லிபுத்தூர் கோயிலில் ஆண்டாளுக்கு 108 பட்டுப்புடவை அணிவிக்கும் வைபவம் விடிய விடிய நடந்தது. விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில், ஒவ்வொரு ஆண்டும் கவுசிக ஏகாதசியை முன்னிட்டு ஆண்டாள், ரெங்கமன்னார், பெரிய பெருமாள், பூதேவி, ஸ்ரீதேவி கருடாழ்வார் மற்றும் ஆழ்வார்களுக்கு 108 பட்டுப்புடவை அணிவிக்கும் வைபவம் நடைபெறுவது வழக்கம். நேற்று முன்தினம் கவுசிக ஏகாதசி என்பதால் கோயிலில் விடிய, விடிய தெய்வங்களுக்கு 108 பட்டுப்புடவை அணிவிக்கும் வைபவம் நடந்தது. இதற்காக நேற்று முன்தினம் இரவு ஆண்டாள், ரெங்கமன்னார், கருடாழ்வார் தெய்வங்கள் மேளதாளங்கள் முழங்க கோயிலில் இருந்து ஆண்டாள் கோயில் வளாகத்தில் உள்ள பெரிய பெருமாள் சன்னதி பகல்பத்து மண்டபத்திற்கு கொண்டு வரப்பட்டனர். அங்கு ஆண்டாள், ரங்கமன்னார், கருடாழ்வார், பெரியபெருமாள், பூமாதேவி, ஸ்ரீதேவிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.

 நள்ளிரவு 12 மணி முதல் ஆண்டாள், ரங்கமன்னார் உள்ளிட்ட தெய்வங்களுக்கு 108 பட்டுப்புடவைகள் அணிவிக்கும் வைபவம் துவங்கியது. கவுசிக புராணத்தை வேதபிரான் பட்டர் சுதர்சன் படித்தார். பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து தரிசனம் செய்தனர். ஆண்டாள் கோயில் அர்ச்சகர் ஒருவர் கூறுகையில், ‘‘குளிர்காலம் துவங்கியதை அறிவிக்கும் வகையில் கவுசிக ஏகாதசி தினமான நேற்று தெய்வங்களுக்கு 108 பட்டுப்புடவைகள் அணிவிக்கப்பட்டன. நள்ளிரவு 12 மணிக்கு துவங்கிய இந்த நிகழ்ச்சி அதிகாலை வரை நடைபெற்றது’’ என்றார். ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி இளங்கோவன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.


Tags : occasion ,Srivilliputhur ,Kausika Ekadasi: Vidya Vidya , Kausika Ekadasi, per year, 108 silks
× RELATED ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை சரணாலயம்: புலிகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்