×

அடையாறு ஆற்றின் கரை உடைப்பால் சென்னை புறநகரில் 1 லட்சம் வீடுகள் 3வது நாளாக வெள்ளத்தில் மிதக்கிறது

சென்னை: நிவர் புயல் காரணமாக தாம்பரம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த புதன்கிழமை மட்டும் 31 செ.மீ. மழை பெய்தது. இதனால், தாம்பரம் அருகே உள்ள முடிச்சூர், வரதராஜபுரம், மணிமங்கலம், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, பெருங்களத்தூர், காட்டாங்கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் 4 முதல் 5 அடிக்கு தண்ணீர் சூழ்ந்தது.
அந்த பகுதியில் கடந்த மூன்று நாட்களாக மின்சாரம் இல்லாததால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. அத்தியாவசிய பொருட்களான பால், உணவு கிடைக்காமல் அவதிப்பட்டனர். இந்த பகுதிகளில் மட்டும் சுமார் 10 ஆயிரம் வீடுகள் நேற்று 3வது நாளாக தண்ணீரில் மிதக்கிறது. பெரும்புதூர் அருகே வரதராஜபுரம் ஊராட்சியில் 20க்கும் மேற்பட்ட நகர்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியை ஒட்டியபடி அடையாறு கால்வாயின் கரை உள்ளன. கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் இந்த கால்வாயின் கரை உடைந்தது. இதனால் 20க்கும் மேற்பட்ட நகர் பகுதிகளில் உள்ள சுமார் 4 ஆயிரம் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.

இப்பகுதிகளிலும் கடந்த 3 நாட்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதுவரை உணவு, குடிநீர் உள்ளிட்ட எவ்வித நிவாரண உதவிகளும் கிடைக்கவில்லை. இதனால் வீடுகளை விட்டு வெளியேற முடியாத மக்கள், அத்தியாவசிய உணவுகூட கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.சென்னை மாநகராட்சி பகுதியான வேளச்சேரி, தரமணி, செம்மஞ்சேரி உள்ள பகுதிகளும், நகரின் முக்கிய பகுதிகளான கே.கே.நகர், மாம்பலம், வியாசர்பாடி, பெரம்பூர், திருவொற்றியூர், எண்ணூர் உள்ளிட்ட பகுதிகளிலும் குடியிருப்புக்குள் தண்ணீர் புகுந்தது. இங்குள்ளவர்கள் குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமலும், சாப்பாடு இல்லாமலும் கஷ்டப்படுகின்றனர்

பல ஆயிரம் கோடி வீண்
2015ம் ஆண்டு கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி திறந்துவிட்டபோது, முடிச்சூர், வரதராஜபுரம், ராயப்பாநகர், மணிமங்கலம் ஆகிய இடங்களில் ஊருக்குள் 10 அடிக்கும் மேல் தண்ணீர் தேங்கியது. இதையடுத்து, அடையாறு ஆற்று கால்வாய்களை பல கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டது. தற்போது பெய்த 31 செ.மீ. மழைக்கே கால்வாய் கரை உடைந்ததால் கோடி கோடியாக செலவு செய்த பணம் வீண் என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.



Tags : houses ,suburbs ,Chennai ,river ,Adyar , By breaking the banks of the Adyar River 1 lakh houses in the suburbs of Chennai Floats in flood on 3rd day
× RELATED சசிகலா ஒரு வெற்று பேப்பர்: ஜெயக்குமார் கிண்டல்