கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் மூன்று மருந்து நிறுவனங்களில் பிரதமர் இன்று நேரடி ஆய்வு: குஜராத், மகாராஷ்டிரா, தெலங்கானா செல்கிறார்

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா தடுப்பூசி தயாரிப்பு இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், அவற்றை தயாரிக்கும் 3 மருத்துவ நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி இன்று நேரடியாக சென்று ஆய்வு செய்கிறார்.உலகம் முழுவதும் 6 கோடிக்கும் அதிகமானோரை பாதித்து, 14 லட்சம் உயிர்களைப் பலி வாங்கியிருக்கிறது கொரோனா. தடுப்பூசி ஒன்றே தீர்வு என்பதால் உலகின் பல நாடுகள் தடுப்பூசி தயாரிப்பில் வேகம் காட்டி வருகின்றன. ஆனாலும், தடுப்பூசி தயாரிப்பில் இந்தியாவின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருக்கும் என்று உலக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ராஸ், பில்கேட்ஸ் போன்றோர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதனால் இந்தியா தயாரித்து வரும் 5 வெவ்வேறு தடுப்பூசிகள் குறித்து மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இவற்றில் நிறைவுக்கட்டத்திலுள்ள 3 தடுப்பூசி தயாரிப்பை பிரதமர் மோடி இன்று நேரில் ஆய்வு செய்கிறார்.

* குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் இருந்து 20 கிமீ தொலைவில் உள்ளது ஜிடஸ் கெடிலா நிறுவனம். சங்கோடர் தொழிற்பேட்டை பகுதியிலுள்ள இந்நிறுவனத்துக்கு காலை 9 மணிக்கு மோடி வருகை தருகிறார். ஜிடஸ் கெடிலாவின் ‘ஜைகோவ்-டி’ தடுப்பூசி, மனிதர்களுக்கு கொடுத்து பரிசோதிக்கப்படுவதில் 2ம் நிலையை எட்டியுள்ளது.

* மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் உள்ள பிரபலமான சீரம் நிறுவனத்தில், ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகம், அஸ்ட்ரா ஜெனிகாவின் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி பரிசோதனை இறுதிக்கட்டத்தில் இருக்கிறது. இங்கு, மதியம் 12.30க்கு மோடி ஆய்வு செய்கிறார்.

* பின்னர், அங்கிருந்து தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஐதராபாத் சென்று, அங்குள்ள பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்திருக்கும் தடுப்பூசி பற்றியும் நேரில் ஆய்வு செய்கிறார். பாரத் பயோடெக் தயாரித்திருக்கும் ‘கோவாக்சின்’ தற்போது 3ம் கட்ட ஆய்விலுள்ளது.

கொரோனா தடுப்பூசியின் தற்போதைய நிலை, அவற்றை எப்போது மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வருவது, எப்படி விநியோகம் செய்வது போன்றவை குறித்து திட்டமிடுவதற்காக, இந்த நேரடி ஆய்வுகளை பிரதமர் மோடி மேற்கொள்கிறார்.

Related Stories:

>