சீதோஷ்ண நிலை மாற்றம் குடியிருப்புகளை நோக்கி படையெடுக்கும் பாம்புகள்: பொதுமக்கள் பீதி

தொண்டாமுத்தூர்: மேற்குதொடர்ச்சி மலையோரம் உள்ள கிராமங்களில் உள்ள குடியிருப்புகளை நோக்கி பாம்புகள் படையெடுப்பதால் பொதுமக்கள் பீதி அடைந்து வருகின்றனர்.தொண்டாமுத்தூர்,காரூண்யாநகர்,தொம்புலிபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக குடியிருப்பினை ஒட்டிய பகுதிகளில் பாம்புகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.சீதோஷ்ண நிலை காரணமாகவும்,தொடர் மழையின் போது மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து மழை வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட பாம்புகள் இரைதேடி கால்நடைகளை அடைத்து வைத்துள்ள பட்டிகளுக்கு வந்து பதுங்குகின்றன. நேற்று மாலை காருண்யா நகர் ரோஸ் கார்டன் பகுதியில் சிறுவர்கள் விளையாடி கொண்டிருந்த போது புதா் ஒன்றில் இருந்து மலைபாம்பு வெளியே வந்துள்ளது. அதிர்ச்சி அடைந்த சிறுவர்கள் இதுகுறித்து அக்கம்பக்கத்தினரிடம் தகவல் அளித்தனர். அப்பகுதி குடியிருப்புவாசிகள் பொக்லைன் இயந்திரத்தின் உதவியோடு அப்பகுதியில் உள்ள புதர்களை உடனடியாக சுத்தப்படுத்த துவங்கினா்.

2 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பின் 10 அடி நீள மலைபாம்பு பிடிபட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மதுக்கரை வனத்துறையினர் பாம்பினை பத்திரமாக மீட்டு  நண்டக்கரை அணைப்பகுதியில் விடுவித்தனர். கடந்த 10 நாட்களுக்கு முன்பாக  தொம்புலிபாளையம் நொய்யல் நகரில் இதே போல 10 அடி நீள மலைபாம்பு பிடிபட்டது. அடிக்கடி பாம்புகள் நடமாட்டம் அதிகரித்து இருப்பதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.மேலும் பூண்டி ெசல்லும் சாலையில் இரவு நேரத்தில் நல்லபாம்பு, சாரைபாம்பு, கட்டுவிரியன்,ராஜநாகம் உள்ளிட்ட கொடிய விஷமுள்ள பாம்புகள் இரைதேடி அலைகின்றன. இதனால் இருசக்கர வாகனத்தில் செல்வோர் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பனி மூட்டம் காரணமாக பாம்புகள் கதகதப்பிற்காக வைக்கோல் போர்,ஆடு,மாடுகளை அடைத்து வைக்கும் பட்டிகளில் பதுங்கியிருக்க வாய்ப்பு உள்ளதால் விவசாயிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

Related Stories:

>