நாகர்கோவிலில் பரபரப்பு அதிமுக எம்.பி. வீட்டு முன் நாட்டு வெடிகுண்டு வீச்சு? தீபாவளி பட்டாசுதான் என போலீசார் தகவல்

நாகர்கோவில்: அதிமுக மாநிலங்களவை உறுப்பினரும், குமரி மாவட்ட முன்னாள் அதிமுக செயலாளருமான விஜயகுமார், நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் அருகே ராமவர்மபுரம் காலனியில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம், விஜயகுமார் எம்.பி. டெல்லி புறப்பட்டு சென்றார். நேற்று காலை அவரது வீட்டுக்கு டிரைவர் வந்த போது, வீட்டின் கேட் அருகே  பந்து போல் உருளையான பொருள் கிடந்தது. அருகில் சென்று பார்த்தபோது அதில் வெடிமருந்துகள் நிரப்பப்பட்டு வீசப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இதுபற்றி எம்.பி.க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலறிந்து நேசமணிநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு  சோதனை நடந்தது. ஐஸ்கிரீம் டப்பாவில், வெடி மருந்துகளை நிரப்பி நாட்டு வெடிகுண்டு போல் தயாரித்து, யாராவது வீசி சென்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. விஜயகுமார் எம்.பி. வீட்டில் வெடிகுண்டு வீசப்பட்டதாக தகவல் பரவியதை தொடர்ந்து, அவரது ஆதரவாளர்கள் அங்கு திரண்டனர். கடந்த சில வருடங்களுக்கு முன் விஜயகுமார் எம்.பி. வீட்டில் கத்தியுடன் மர்ம நபர் நுழைந்த சம்பவமும் நடந்தது. பின்னர் வேலை கேட்டு வந்தவர் என கூறி வழக்கை முடித்தனர்.

அவர் ஊரில் இருக்கிறார் என நினைத்து  வந்தவர்கள், நீண்ட நேரமாக அவர் கார் வெளியே வராமல் நின்றதால், வாசலில் வெடிகுண்டை வீசி விட்டு தப்பி இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. இப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் மூலம் விசாரணை நடந்து வருகிறது. இப்பகுதியில்தான் முக்கிய பிரமுகர்கள் பலரது வீடுகளும் உள்ளன. எனவே அந்த பகுதியில் வெடி குண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே சம்பவ இடத்தில் இருந்து தடயங்களை சேகரித்து வெடிகுண்டு நிபுணர்கள் ஆய்வு செய்தனர். இதையடுத்து, அது பயர்பால் வகையை சேர்ந்த தீபாவளி பட்டாசுதான் என்றும், வெடிகுண்டு அல்ல என்றும் போலீசார் கூறினர்.

Related Stories:

>