சிட்னி: ‘ஐபிஎல் தொடரில் நான் சரியாக ஆடவில்லை என்பது உண்மைதான். ஆனால் இழந்திருந்த திறனை, இப்போது மீண்டும் கண்டுகொண்டேன். இந்திய அணிக்கு எதிராக நிச்சயம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன்’ என்று ஆஸ்திரேலிய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் உற்சாகமாக தெரிவித்துள்ளார். இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்காக, தீவிர பயிற்சியில் ஆஸி. பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் உள்ளார். இந்திய அணியுடனான மோதல் குறித்து நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘ஐபிஎல் தொடரில் நான் சரியாக ஆடவில்லை என்பது உண்மைதான். ஐபிஎல்லில் எனது ஆட்டம் எனக்கே திருப்தியாக இல்லை. ஆனால் தீவிரமான வலை பயிற்சிக்கு பின்னர், நான் இழந்திருந்த ஃபார்மை திரும்ப மீட்டு விட்டேன். வலை பயிற்சியில் எனது மணிக்கட்டின் அசைவுகளை சரிப்படுத்திக் கொண்டுள்ளேன்.
பந்தை என்னால் விரும்பியபடி திருப்ப முடிகிறது. கால்களின் நகர்வுகளையும் திருத்திக் கொண்டுள்ளேன். முக்கியமாக இறங்கி வந்து பந்தை எதிர்கொள்கையில், முன்கால் நிலையை சரியான முறையில் நிலை நிறுத்திக் கொள்ள பயிற்சி எடுத்துள்ளேன். பவுன்சர் பந்துகளை எதிர்கொள்ள இந்த பயிற்சி நன்கு உதவும். இன்னும் வார்த்தைகளால் என்னால் விவரிக்க முடியவில்லை. மனதளவில் முழு தன்னம்பிக்கையுடன் உணர்கிறேன். உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களின் வரிசையில் எனது பெயரும் உள்ளது. அதை இந்த தொடரில் நான் நிரூபித்துக் காட்டுவேன். சிறப்பாக ஆட வேண்டும் என்பதே தற்போதைய இலக்கு.
டெஸ்ட் அணியின் கேப்டன் டிம் பெய்ன், ஒருநாள் அணியின் கேப்டன் பின்ச் ஆகியோருக்கு எனது முழு ஒத்துழைப்பு எப்போதுமே உண்டு. ஆனால் எதிர்காலத்தில் நானும் கேப்டனாக ஆஸி. அணிக்கு தேர்வு செய்யப்படலாம். அதற்கான வாய்ப்புகளும் உள்ளன. அதை நோக்கியும் முன்னேறுவேன்’’ என்று ஸ்மித் தெரிவித்துள்ளார்.