×

உயர் நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு வக்கீல் ஆஜராகவில்லை என்பதற்காக வழக்கை தள்ளுபடி செய்யக்கூடாது: மனுதாரருக்கு உதவ வழக்கறிஞரை நியமிக்க வேண்டும்

புதுடெல்லி: ‘மனுதாரரின் வழக்கறிஞர் தொடர்ந்து 4 முறை ஆஜராகவில்லை என்பதற்காக வழக்கை தள்ளுபடி செய்யக்கூடாது. மனுதாரருக்கு உதவி செய்வதற்கு வழக்கறிஞரை நியமிக்க வேண்டும்,’ என உயர் நீதிமன்றங்களை உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. உயர் நீதிமன்றங்கள், கீழ் நீதிமன்றங்களில் லட்சக்கணக்கான ஏழைகளும், படிப்பறிவு இல்லாதவர்களும் கூட வழக்குகளை நடத்துகின்றனர். இவர்கள் சார்பாக ஆஜராகும் வழக்கறிஞர்கள், பல நேரங்களில் வழக்குகளில் முறையாக ஆஜராவதில்லை. இதுபோல், வழக்கறிஞர்கள் இரண்டு அல்லது மூன்று முறை தொடர்ந்து ஆஜராகாமல் விட்டு விட்டால், அந்த வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்து விடுகின்றனர். மனுதாரர்களுக்கு இது மிகப்பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை அளித்துள்ளது.

கடந்த 2015ல் ஆயுத தடுப்பு சட்டத்தின் கீழ் ஒருவருக்கு விசாரணை நீதிமன்றம் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. அதை எதிர்த்து அவர் 2017ல் பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மனுதாரருக்கு இந்த வழக்கில் 2018ல் ஜாமீன் கிடைத்துள்ளது. அவரது வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் கடந்த பிப்ரவரியில் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 6 முறை வழக்கு விசாரணைக்கு வந்த போது, 4 முறை மனுதாரர் தரப்பில் எந்த வக்கீலும் ஆஜராகவில்லை என்பதை சுட்டிக்காட்டிய உயர் நீதிமன்றம், வழக்கில் மனுதாரருக்கும் அவரது வக்கீலுக்கும் ஆர்வமில்லை எனக் கூறி தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரி மனுதாரர் அளித்த வழக்கை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இதை எதிர்த்து மனுதாரர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்து மல்கோத்ரா, இந்திரா பானர்ஜி அடங்கிய அமர்வு, ‘‘4 முறை மனுதாரரின் வழக்கறிஞர் ஆஜராகவில்லை என்பதற்காக வழக்கை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் வெளிப்படையாகவே தவறு இழைத்துள்ளது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகவில்லை என்றால், நீதிமன்றத்திற்கும், மனுதாரர்களுக்கும் ஆலோசனை வழங்குவதற்காக வழக்கறிஞர் (அமிக்கஸ் குரியே) ஒருவரை உயர் நீதிமன்றம் நியமித்திருக்க வேண்டும். இதுபோல், வழக்கை தள்ளுபடி செய்து குடிமக்களின் சுதந்திரத்தை தடாலடியாக பறிக்க முடியாது’’ எனக் கூறி உயர் நீதிமன்ற உத்தரவுகளை ரத்து செய்து உத்தரவிட்டனர். 4 முறை மனுதாரரின் வழக்கறிஞர் ஆஜராகவில்லை என்பதற்காக வழக்கை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் வெளிப்படையாகவே தவறு இழைத்துள்ளது.


Tags : Supreme Court ,High Courts ,advocate ,lawyer ,petitioner , Supreme Court orders High Courts not to dismiss case for non-appearance of counsel: Appoint counsel to assist petitioner
× RELATED விவிபேட் எந்திரத்தில் பதிவாகும்...